Thursday, 26 March 2026

மீண்டும் மலரட்டும் மார்க்கக் கல்வி

 புனித ரமலான் மாதம் நம் ஆன்மாவைப் பக்குவப்படுத்தி, இறைவழியில் நம்மை வழிநடத்திய ஒரு அருமையான பயிற்சி பாசறையாக அமைந்தது.


நோன்பு, தொழுகை மற்றும் தர்மங்கள் மூலம் நாம் பெற்ற அந்த ஆன்மீகப் புத்துணர்ச்சியை, ரமலான் விடுமுறைக்கு விடை கொடுத்துவிட்டு மீண்டும் கல்வியின் வாயிலாகத் தொடர வேண்டிய தருணம் இது.


"கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற நபிமொழிக்கேற்ப, உலகக் கல்வியோடு உன்னதமான மார்க்கக் கல்வியையும் போதிக்கும் நமது மதரஸாக்கள், இந்த விடுமுறைக்குப் பின் மீண்டும் தன் கதவுகளைத் திறக்கின்றன.


மஸ்ஜிதின் மடியில் ஒலிக்கப் போகும் திருக்குர்ஆன் ஓசைகளும், மாணவர்களின் கல்வி ஆர்வமும் நம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய ஒளியைத் தரப்போகின்றன. அந்த அறிவொளிப் பயணத்தின் அவசியத்தையும், மதரஸாக்கள் மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இன்றைய ஜும்ஆவில் காண்போம்.


பிள்ளைகள் அல்லாஹ் நமக்கு அளித்த மாபெரும் அருட்கொடை மற்றும் அமானிதம் (பொறுப்பு) ஆவர். அவர்களை வெறும் உலகியல் கல்வியில் சிறந்தவர்களாக வளர்ப்பது மட்டும் போதாது மறுமை வாழ்விலும் வெற்றி பெறக்கூடிய 'மார்க்கம் உள்ள' பிள்ளைகளாக உருவாக்குவதே ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.


"பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கலை, அவர்களை மார்க்கப் பற்றுள்ளவர்களாக வளர்ப்பது ஒரு தவம்! ஒரு தந்தை தன் மகனுக்கு அளிக்கும் ஆகச்சிறந்த பரிசு 'நல்லொழுக்கம்' என்கிறது நபிமொழி. நம் பிள்ளைகளை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து, சொர்க்கத்தின் வாசலில் நம்மை வரவேற்கச் செய்யும்


ஒரு செடி ஆரோக்கியமாக வளர அதன் வேர்களுக்கு நீர் எவ்வளவு அவசியமோ, அதுபோல ஒரு மனிதனின் வாழ்வு செம்மையாக அமைய மார்க்கக் கல்வி மிக அவசியமானது. 


இன்றைய நவீன உலகில் உலகியல் கல்வியில் (Academic Education) முதலிடம் பிடிக்க பிள்ளைகளைத் தயார் செய்யும் நாம், அவர்களின் மறுமை வாழ்வை உறுதி செய்யும் மார்க்கக் கல்வியில் காட்ட வேண்டிய அக்கறை இன்னும் முதன்மையானது.


மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம்


திருக்குர்ஆனின் முதல் வசனமே ஓதுவதைப் பற்றியும், அறிவைப் பற்றியும்தான் இறங்கியது. இது கல்வியின் முக்கியத்துவத்திற்கு மிகச்சிறந்த சான்றாகும்.


١. اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ

٢. خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ

٣. اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُ

٤. الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِ

٥. عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

"படைத்த உம் இறைவனுடைய திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக! அவன் மனிதனை ‘அலக்’ என்ற (கரு)விலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்." (அல்குர்ஆன் 96:1-5)


إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

"அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு (உண்மையாக) அஞ்சுபவர்கள் அறிஞர்கள் (உலமாக்கள்) தாம்."


قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

"...கூறுவீராக: அறிவுடையோரும் அறிவற்றோரும் சமமாவார்களா? நிச்சயமாக அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்." (அல்குர்ஆன் 39:9)


خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

"உங்களில் சிறந்தவர் யாரெனில், குர்ஆனைக் கற்று தானும் கற்றுக்கொண்டு, அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுத்தவரே ஆவார்." (ஆதாரம்: புகாரி)


வாழ்வின் வழிகாட்டி

உலகக் கல்வி ஒரு மனிதனுக்குப் பிழைப்பைச் கற்றுக்கொடுக்கிறது என்றால், மார்க்கக் கல்வி அந்த மனிதனுக்கு எப்படி வாழ வேண்டும் என்ற உன்னத வாழ்வியலைக் கற்றுக்கொடுக்கிறது. வெறும் எழுத்துக்களைக் கற்பது மட்டுமல்ல கல்வி மாறாக, இறைவனைப் பற்றிய அச்சத்தையும், சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய அன்பையும் இதயத்தில் விதைப்பதே உண்மையான மார்க்கக் கல்வி.

ஒரு குழந்தை தான் யார், எதற்காகப் படைக்கப்பட்டோம், தனது இலக்கு என்ன என்பதை உணர மார்க்கக் கல்வி வழிகாட்டுகிறது.

தீய பழக்கவழக்கங்கள் நிறைந்த இன்றைய சமூகச் சூழலில், எது 'ஹலால்' (அனுமதிக்கப்பட்டது), எது 'ஹராம்' (விலக்கப்பட்டது) என்ற தெளிவு இருந்தால் மட்டுமே ஒரு பிள்ளை தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்.


طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

பொருள்: "கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்." (ஆதாரம்: இப்னு மாஜா) என்ற நபிமொழிக்கேற்ப, பிள்ளைகளுக்கு அடிப்படை மார்க்க அறிவை ஊட்டுவது பெற்றோரின் மீதுள்ள 'அமானிதம்' (பொறுப்பு) ஆகும்.

இந்த அடித்தளத்தோடு, மார்க்கமுள்ள பிள்ளைகளை உருவாக்க நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ:


1. முன்மாதிரியான பெற்றோர்கள்

பிள்ளைகளுக்கு உபதேசம் செய்வதை விட, பெற்றோர்கள் வாழ்ந்து காட்டுவதே சிறந்த பாடமாகும். "முதலில் உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள், பிறகு உங்கள் குடும்பத்தாரை" என்கிறது திருக்குர்ஆன். பெற்றோர்கள் தொழுகை, பொறுமை மற்றும் நற்குணங்களில் முன்மாதிரியாகத் திகழும்போது, பிள்ளைகள் இயல்பாகவே அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சிறு வயதிலேயே பார்வையை இழந்தார்கள். அப்போது அவர்களின் தாய் அழுது புலம்பாமல், தன் பிள்ளைக்குப் பார்வை கிடைக்க வேண்டுமென்று அல்லாஹுத்தஆலாவிடம் தொடர்ந்து துஆ செய்தார்கள். ஒருநாள் கனவில் இப்ராஹீம் (அலை) அவர்கள் தோன்றி, "உன் துஆவின் காரணத்தால் உன் மகனுக்குப் பார்வை கிடைத்துவிட்டது" எனக் கூறினார்கள். விடிந்தபோது அவருக்குப் பார்வை கிடைத்திருந்தது.

பெற்றோரின் இறையச்சமும், இடைவிடாத பிரார்த்தனையும் பிள்ளைகளின் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதற்கு இதுவே சான்று.


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)

நான்கு பெரும் இமாம்களில் ஒருவரான இமாம் அஹ்மத் அவர்களும் ஒரு 'யதீம்' (தந்தையை இழந்தவர்) தான்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாயார் ஸஃபிய்யா பின்த் மைமூனா வளர்த்தார்.

 பனி பொழியும் அதிகாலை நேரங்களில், தன் மகனை படுக்கையை விட்டு எழுப்பி, இமாம் அஹ்மத் அவர்களுக்கு ஒுழு (உளூ) செய்யத் தண்ணீர் தயார் செய்து கொடுப்பார். பிறகு, தெருக்கள் இருட்டாக இருக்கும் என்பதால், மகனின் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வார்.

தாயின் அந்த அதிகாலை உழைப்புதான், பிற்காலத்தில் ஒரு கோடி ஹதீஸ்களை மனனம் செய்த "முஹத்திதுல் இஸ்லாம்" உருவாகக் காரணமாக இருந்தது.


பெற்றோரின் கடமை: 

பிள்ளைகள் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடை (அமானிதம்). அவர்களை உலகக் கல்வியில் சிறந்தவர்களாக மாற்றுவதில் காட்டும் அதே ஆர்வத்தை, அவர்களின் மறுமை வாழ்வைச் சீர்ப்படுத்தும் மார்க்கக் கல்வியிலும் பெற்றோர் காட்ட வேண்டும். ரமலான் விடுமுறைக்குப் பிறகு மதரஸாக்கள் திறக்கப்படும் இத்தருணத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.


முன்னுரிமை அளித்தல் 

பல நேரங்களில் நாம் உலகக் கல்விக்கான 'டியூஷன்' வகுப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மதரஸாவிற்குத் தருவதில்லை. உதாரணமாக, ஒரு குழந்தைக்கு பள்ளித் தேர்வு இருக்கிறது என்பதற்காக மதரஸாவிற்கு விடுமுறை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். "கல்வி என்பது இறைவனை அறிவது" என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். மதரஸா நேரத்தை மற்ற வேலைகளுக்காக ஒதுக்காமல், அதற்கு முதல் முன்னுரிமை அளிப்பது பெற்றோரின் முதல் கடமை.


ஆர்வமூட்டுதல்

ஒரு தந்தை தன் மகனை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும்போது, வெறும் கடமையாகக் கருதாமல், "இன்று நீ என்ன புதிய வசனம் கற்றாய்?", "உன் உஸ்தாத் (ஆசிரியர்) என்ன சொன்னார்கள்?" என்று அன்போடு விசாரிக்க வேண்டும். ஒரு சிறிய துவா (பிரார்த்தனை) அல்லது ஒரு நல்ல பழக்கத்தை மகன் கற்று வரும்போது, அவனைப் பாராட்டுவது அவனது ஆர்வத்தை இரட்டிப்பாக்கும். இது அந்தப் பிள்ளை மதரஸாவிற்கு விரும்பிச் செல்ல வழிவகுக்கும்.


ஒழுக்கத்தைக் கண்காணித்தல்:

மதரஸாவில் கற்றுக் கொடுக்கும் ஒழுக்கங்களை வீட்டில் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு. "பெரியவர்களுக்கு ஸலாம் சொல்வது", "உணவு உண்ணும் ஒழுக்கம்" போன்றவற்றை மதரஸாவில் கற்று வரும்போது, பெற்றோரும் அதையே வீட்டில் கடைப்பிடித்து அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.


இமாம் மாலிக் (ரஹ்)

மதீனாவின் மாபெரும் அறிஞரான இமாம் மாலிக் அவர்களின் ஆரம்பகால ஆர்வத்தைத் தூண்டியவர் அவரது தாயார்.

இமாம் மாலிக் அவர்கள் கல்வி கற்கச் சென்றபோது, அவரது தாயார் அவருக்கு அழகான ஆடை அணிவித்து, தலப்பாகை கட்டி விடுவார்.

"மகனே! ரபீஆ (ஆசிரியர்) அவர்களிடம் செல். அவருடைய கல்வியை விட, அவருடைய ஒழுக்கத்தையும் (அதப்) பண்பையும் முதலில் கற்றுக்கொள்" என்று அறிவுறுத்தி அனுப்பினார். ஒரு அறிஞருக்குக் கல்வியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை அந்தத் தாய் ஆழமாகப் பதியவைத்தார்.


ஆசிரியர்களுடன் தொடர்பு:

பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை அறிய அவ்வப்போது மதரஸா ஆசிரியர்களைச் சந்தித்து ஆலோசிக்க வேண்டும். பள்ளி விடுமுறைக்குப் பிறகு மீண்டும் மதரஸா தொடங்கும் போது, பிள்ளைகளை உற்சாகப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை முன்கூட்டியே தயார் செய்து தருவது அவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்கும்.


2. சிறு வயதிலேயே தீன் (மார்க்க) கல்வி

செடியை வளர்க்கும்போதே அதற்கான பந்தல் அமைப்பது போல, பிள்ளைகளின் இளம் பருவத்திலேயே அவர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான நேசத்தையும் புகட்ட வேண்டும்.


ஏழு வயதில் தொழுகையை ஏவுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப, அவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வதும், வீட்டில் ஜமாஅத்தாகத் தொழுவதும் அவர்களுக்கு மார்க்கப் பிணைப்பை ஏற்படுத்தும்.


குர்ஆனை ஓதவும், அதன் பொருளைப் புரிந்து கொள்ளவும் சிறு வயதிலேயே ஆர்வம் ஊட்ட வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை சிறுவரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தங்களுக்குப் பின்னால் அமர வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் தத்துவத்தைக் கூறினார்கள்: "சிறுவனே! நீ அல்லாஹ்வைப் பாதுகாத்துக்கொள் (அவன் ஏவல்களைப் பேணு), அவன் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை நினைவில் கொள், உனது ஒவ்வொரு காரியத்திலும் அவனை உனக்கு முன்னால் காண்பாய்."


 சிறு வயதிலேயே அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை (அகீதா) ஆழமாகப் பதிய வைப்பது அவர்களை எக்காலத்திலும் வழிதவற விடாது.


இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் மிகச் சிறிய வயதிலேயே தந்தை இல்லாத நிலையில், வறுமைக்கிடையிலும் தனது மார்க்கக் கல்வியைத் தொடங்கினார்கள். அவர்களிடம் காகிதம் வாங்கக் கூட வசதியில்லாதபோது, மதரஸாவில் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை எலும்புத் துண்டுகளிலும், தட்டையான கற்களிலும் குறித்து வைத்துப் படித்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான் அவர்களைப் பிற்காலத்தில் உலகமே போற்றும் ஒரு மாபெரும் அறிஞராக மாற்றியது. நமது பிள்ளைகளுக்கு மதரஸா தரும் அந்த 'அறிவு' தான் அவர்களின் உண்மையான சொத்து.


3. நற்குணங்களும் ஒழுக்கமும் 


கல்வியை விட ஒழுக்கம் மேலானது. உண்மையே பேசுதல், பெரியவர்களுக்கு மரியாதை அளித்தல், பிறருக்கு உதவுதல் போன்ற பண்புகளை இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் கற்றுக்கொடுக்க வேண்டும்.


"مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ"

"ஒரு தந்தை தன் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகளில், நற்பண்பை (ஒழுக்கத்தை) விடச் சிறந்தது எதுவுமில்லை." திர்மிதி 


ஒரு தந்தை தன் பிள்ளைக்கு சொத்துப்பத்துக்களைச் சேர்த்து வைப்பதை விட, அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், நற்பண்பு கொண்டவர்களாகவும் வளர்ப்பதே அவர் செய்யும் மிகப்பெரிய தர்மம் மற்றும் மிகச்சிறந்த முதலீடு என்று இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.


பெரியவர்களுக்கு எப்படி அறிவுரை சொல்ல வேண்டும் என்பதற்கு ஒரு அழகான நிகழ்வு உண்டு. ஒரு முதியவர் தவறாக வுழுச் செய்வதைக் கண்ட ஹஸன் மற்றும் ஹுசைன் (ரலி) அவர்கள், அவரை நேரடியாகக் குறை சொல்லவில்லை. அவரிடம் சென்று, "ஐயா! எங்களில் யார் சரியாக வுழுச் செய்கிறோம் என்று கொஞ்சம் பாருங்கள்" எனக் கூறிச் செய்து காட்டினார்கள். அந்த முதியவர் தனது தவறை உணர்ந்து அவர்களைப் பாராட்டினார்.


பிறரை மதிப்பதும், மென்மையாக நடந்து கொள்வதும் இஸ்லாமிய ஒழுக்கத்தின் உச்சகட்டம்.


4. சூழலும் தோழமைகளும்


பிள்ளைகள் வளரும் சூழல் அவர்களின் குணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல நண்பர்களுடன் பழகுவதை உறுதி செய்வதும், தேவையற்ற மற்றும் தீய பொழுதுபோக்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் அவசியம். ஹலாலான வழியில் இன்பங்களை அனுபவிக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.


عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

"مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالجَلِيسِ السَّوْءِ، كَمَثَلِ صَاحِبِ المِسْكِ وَكِيرِ الحَدَّادِ، فَصَاحِبُ المِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَكِيرُ الحَدَّادِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً"

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகான உதாரணத்தைச் சொன்னார்கள்: "நல்ல நண்பன் அத்தர் (வாசனை திரவியம்) விற்பவனைப் போன்றவன். அவரிடமிருந்து உனக்கு அத்தர் கிடைக்காவிட்டாலும், அந்த நறுமணமாவது உன்னைத் தீண்டும். தீய நண்பன் கொல்லன் பட்டறையில் வேலை செய்பவனைப் போன்றவன். அவனிடமிருந்து வரும் நெருப்புப் பொறி உன் ஆடையைச் சுடும் அல்லது அந்தத் துர்நாற்றம் உன்னைத் தீண்டும்."


பிள்ளைகள் பழகும் நண்பர்கள் அத்தர் வியாபாரியைப் போல நறுமணம் மிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


5. தொடர் துஆ (பிரார்த்தனை)

எல்லா முயற்சிகளையும் விட மிக வலிமையானது அல்லாஹ்விடம் கையேந்துவதாகும்.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

"எங்கள் இறைவா! எங்கள் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியினரிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! மேலும் எங்களை இறை அச்சம் உடையவர்களுக்கு முன்மாதிரியாக ஆக்குவாயாக!" (அல்குர்ஆன் 25:74) - இந்தத் துஆவை பெற்றோர்கள் எப்போதும் ஓதி வர வேண்டும்.


இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு நிம்மதியான சூழலில் மட்டும் துஆ செய்யவில்லை. ஊரே எதிர்த்தபோதும், தனிமையில் இருந்தபோதும்,

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

"எங்கள் இறைவா! என்னையும், எனது சந்ததியினரையும் தொழுகையை நிலைநாட்டக் கூடியவர்களாக ஆக்குவாயாக!" (14:40) என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதன் பலனாகவே பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அவர்கள் வழிவந்தவர்கள் தொழுகையாளிகளாக இருக்கிறோம்.


பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகப் பெற்றோர்கள் செய்யும் துஆ ஒருபோதும் வீண் போகாது.


"சஹாபாக்களின் கல்வித் தாகம்" 


சஹாபாக்களின் கல்வி ஆர்வம் என்பது வெறும் புத்தக அறிவாக இல்லாமல், இறைவனின் கட்டளையை நேரடியாக நபிகளாரிடம் கேட்டுப் பெற வேண்டும் என்கிற தாகமாக இருந்தது. 


முறை வைத்து கல்வி கற்ற உமர் (ரலி)


அமீருல் மூமினீன் உமர் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு அருகில் இருந்த 'அவாலி' எனும் பகுதியில் வசித்து வந்தார்கள். அவர்கள் விவசாயப் பணிகளிலும் ஈடுபட வேண்டியிருந்ததால், தினமும் நபிகளாரின் சபைக்கு வர முடியவில்லை.


உமர் (ரலி) அவர்கள் தனது அன்சாரித் தோழர் ஒருவருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன்படி, ஒரு நாள் உமர் (ரலி) நபிகளாரின் சபைக்குச் சென்று அன்று அருளப்பட்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகளைக் கற்று வந்து தோழருக்குச் சொல்வார். மறுநாள் அந்தத் தோழர் சென்று கற்று வந்து உமர் (ரலி) அவர்களிடம் சொல்வார்.

வாழ்வாதாரப் பணிகளுக்கு மத்தியிலும், ஒரு நாள் கூட கல்வியைத் தவறவிடக் கூடாது என்ற அவர்களின் திட்டமிடலை இது காட்டுகிறது.


அபு ஹுரைரா (ரலி) அவர்களின் அர்ப்பணிப்பு

கல்விக்காகத் தனது பசியையும், வறுமையையும் பொறுத்துக் கொண்டவர் அபு ஹுரைரா (ரலி).


இவர் 'அஸ்ஸுப்பா' (திண்ணைத் தோழர்கள்) வரிசையில் முதன்மையானவர். பசியால் மயங்கி விழும் நிலையிலும் நபிகளாரை விட்டுப் பிரியாமல் அவர்கள் பேசுவதை எல்லாம் மனனம் செய்வார். ஒருமுறை நபிகளாரிடம், "நான் கேட்டவற்றை மறந்துவிடுகிறேன்" என்று முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மேலாடையை விரிக்குமாறு கூறி, அதில் தனது கைகளால் அள்ளிப் போடுவது போல் சைகை செய்து, பிறகு அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதன் பிறகு அவர் எதையும் மறந்ததில்லை.


உலகியல் சுகங்களை விட அறிவைப் பெறுவதையே அவர்கள் பெரும் பாக்கியமாகக் கருதினர்.


ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு மாதப் பயணம்

ஒரே ஒரு நபிமொழியை (ஹதீஸ்) உறுதிப்படுத்துவதற்காக சஹாபாக்கள் மேற்கொண்ட நீண்ட பயணங்கள் வியக்கத்தக்கவை.


ஜாபிர் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) என்பவரிடம் ஒரு ஹதீஸ் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் அப்போது ஷாம் (சிரியா) தேசத்தில் இருந்தார். அந்த ஒரே ஒரு செய்தியை நேரடியாக அவரிடமே கேட்டு உறுதிப்படுத்த, ஜாபிர் (ரலி) ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதம் பயணம் செய்து ஷாம் சென்றடைந்தார்.


கல்வியின் நம்பகத்தன்மைக்காக அவர்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டார்கள் என்பதற்கு இது சிறந்த சான்று.


பெண்களின் கல்வி ஆர்வம்

சஹாபாக்களில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கல்வியில் பெரும் ஆர்வம் காட்டினர்.


பெண்கள் ஒருமுறை நபிகளாரிடம் வந்து, "உங்களைச் சுற்றி எப்போதும் ஆண்களே இருக்கிறார்கள், எங்களுக்குக் கற்பிக்கத் தனி நேரத்தை ஒதுக்குங்கள்" என்று கோரிக்கை விடுத்தனர். நபிகளாரும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி கல்வி கற்பித்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அக்காலத்தின் மிகப்பெரிய சட்ட மேதையாகவும், மருத்துவம் மற்றும் கவிதை தெரிந்தவராகவும் திகழ்ந்தார்கள்.


சஹாபாக்களின் கல்வி முறையின் சிறப்பம்சங்கள்:

கேட்டவுடன் செயல்படுதல்: அவர்கள் அறிவைச் சேமிக்க மட்டும் செய்யவில்லை, கற்ற அடுத்த நிமிடமே அதைச் செயல்படுத்தினார்கள்.


பகிர்ந்து கொள்ளுதல்:

ஒரு செய்தியைக் கற்றால், அதை மற்றவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதை ஒரு தார்மீகக் கடமையாகக் கருதினார்கள்.


சமூகத்தின் தூண்கள்

ஒரு சமுதாயம் சீர்பட வேண்டுமானால், அந்தச் சமுதாயத்தின் அடித்தளமான சிறுவர்கள் நல்வழியில் வளர்க்கப்பட வேண்டும். பள்ளிவாசலோடு பிணைக்கப்பட்ட மதரஸா கல்வி, மாணவர்களைப் பள்ளிவாசலோடு நெருக்கமாக்குகிறது. இது அவர்களைத் தீய பழக்கங்களிலிருந்து பாதுகாப்பதோடு, எதிர்காலத்தில் சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்குகிறது.


இஸ்லாத்தின் எழுச்சி என்பது இளைஞர்களின் தியாகத்தால் உருவானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை முன்வைத்தபோது, அதை முதலில் ஏற்றுக்கொண்டு தோள் கொடுத்தவர்கள் இளைஞர்களே.


 அலி (ரலி), ஜாபர் பின் அபி தாலிப் (ரலி), முசாப் பின் உமைர் (ரலி) போன்றோர் மிக இளம் வயதிலேயே இஸ்லாத்திற்காகப் பெரும் பங்காற்றினர்.


"இளைஞர்களே! நீங்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல; வரலாற்றைப் படைப்பவர்கள்."


ஜும்ஆ உரையின் போது பேசக்கூடாது என்ற அடிப்படை ஒழுக்கம் கூடத் தெரியாமல் இளைஞர்கள் இன்று பள்ளிவாசலின் கடைசி வரிசைகளில் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:

 ஜும்ஆ வை ஒரு சடங்காகப் பார்ப்பது.

 ஜும்ஆ வின் சட்டதிட்டங்கள் குறித்த தெளிவான அறிவு இல்லாமை.


அடிப்படை ஒழுக்கம் தெரியாத தலைமுறை உருவாகிறது என்றால், நாம் அவர்களுக்குச் சரியான மார்க்கப் போதனைகளைச் சென்றடையச் செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.


இளைஞர்களே! நீங்கள் இந்தச் சமூகத்தின் தூண்கள். இறை இல்லத்திற்கு வரும்போது அதன் கண்ணியத்தைப் பேணக் கற்றுக்கொள்ளுங்கள்.

உரை நடக்கும்போது நாவுகளைப் பூட்டுங்கள் இதயங்களைத் திறங்கள்.

வெறும் சடங்கிற்காக வராமல், இறை நெருக்கத்திற்காக வாருங்கள்.

தெரியாத சட்டங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


இளைஞர்கள் சமூகத்தின் தூண்களாக மாற வேண்டுமானால், அவர்கள் பின்வரும் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்:

 பெரியவர்களுக்கு மரியாதை அளித்தல் மற்றும் பள்ளிவாசலின் கண்ணியத்தைப் பேணுதல்.

மார்க்க மற்றும் உலகக் கல்வியில் சிறந்து விளங்குதல்.

சமூகத்தின் வறியவர்களுக்கும், தேவையுடையோருக்கும் உதவி செய்தல்.


சிறுவயதில் கற்கப்படும் கல்வி என்பது பாறையில் செதுக்கப்பட்ட எழுத்தைப் போன்றது. அது ஒருபோதும் அழியாது.


ஒரு செடி வளைந்திருக்கும் போதே அதைச் சீர் செய்ய முடியும்; அது மரமான பிறகு அதை நிமிர்த்த முயன்றால் ஒடிந்துவிடும்.


இளைஞர்கள் ஜும்ஆ உரையின் போது பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்குச் சிறுவயதிலேயே "பள்ளிவாசல் ஒழுக்கம்" குறித்த பயிற்சி முறையாக வழங்கப்படவில்லை என்பதே உண்மை.


"உங்கள் பிள்ளைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுகையை ஏவுங்கள்."


ஏழு வயதிலேயே தொழுகையைப் பழக்கச் சொல்வதன் நோக்கம், அவர்கள் வாலிப வயதை அடையும்போது அந்த வணக்கம் அவர்களின் ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும் என்பதுதான்.


இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் பல தவறான வழிகாட்டல்களுக்கு ஆளாகிறார்கள்.


சிறுவயதிலேயே ஒரு குழந்தைக்கு 'ஹலால்' (அனுமதிக்கப்பட்டது) எது, 'ஹராம்' (விலக்கப்பட்டது) எது என்ற அடிப்படை ஞானம் இருந்தால், அவர்கள் வளர்ந்து வாலிபர்களாகும் போது எந்தச் சூழ்நிலையிலும் தடம் மாற மாட்டார்கள்.


மார்க்கக் கல்வி என்பது வெறும் குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல் ஒழுக்கம்.


இன்றைய இயந்திரமயமான உலகில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகத் தார்மீக வளர்ச்சியும் (Moral growth) அவசியமாகிறது. ஒரு கையில் நவீனக் கல்வியும், மறு கையில் மார்க்க விழுமியங்களும் இருக்கும்போதுதான் ஒரு குழந்தையின் ஆளுமை முழுமை பெறுகிறது.


வெறும் மதிப்பெண்களை மட்டும் துரத்தும் இயந்திரங்களாக நம் குழந்தைகளை வளர்ப்பதை விடுத்து, மனிதநேயமும் நற்பண்புகளும் கொண்ட மாணவர்களாக அவர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


இருள் சூழ்ந்த நவீனச் சவால்களுக்கு மத்தியில், நம் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும், அவர்கள் சமூகத்திற்குப் பயனுள்ள சிறந்த ஆளுமைகளாகத் திகழவும் அந்த அறநெறிப் பாடங்கள் அவசியம்.


தூய்மையான உள்ளம், நேர்மையான வாழ்வு மற்றும் பிறர் நலம் பேணும் பண்பு என நற்குணங்களால் நம் சந்ததிகள் சிறக்க, மீண்டும் மலரட்டும் மார்க்கக் கல்வி!

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...