Thursday, 18 June 2026

ஆஷூரா நாளின் மாண்பும், மூஸா (அலை) அவர்களின் வெற்றியும் (ஹிஜ்ரி 1448)


​அல்ஹம்துலில்லாஹ்... நஹ்மதுஹு வநஸ்தஈனுஹு...

​குர்ஆன் வசனம்:

"إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ"

(வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை - சூரா தவ்பா: 36).
​ஹதீஸ்:
"أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ"
(ரமலானுக்குப் பிறகு நோற்கப்படும் நோன்புகளில் மிகச் சிறந்தது, அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும் - முஸ்லிம்).


​கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

​காலங்கள் உருண்டோடி, இதோ 1448-வது ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்று உலகெங்கிலும் பலவிதமான குழப்பங்கள், அநீதிகள், ஒடுக்குமுறைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இஸ்லாமிய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது நமக்கு பெரும் ஆறுதலையும், ஈமானிய பலத்தையும் தரும். அந்த வகையில் அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட இந்த முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளையும், குறிப்பாக ஆஷூரா நாளின் மாபெரும் வரலாற்றையும் இன்று நாம் சிந்திக்க இருக்கிறோம்.

​அல்லாஹ் திருமறையில் கூறிய அந்த நான்கு புனிதமான மாதங்கள்:
 1. துல்கஃதா, 2. துல்ஹஜ், 3. முஹர்ரம், 4. ரஜப்.

​இதில் முஹர்ரம் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. 

எல்லாமே அல்லாஹ்வின் படைப்புகள் தான். இருந்தாலும் சிலவற்றை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுவதற்காக தன்னுடனே இணைத்துக் கொள்கிறான்.

 எப்படி சாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகத்தை 'நாகத்துல்லாஹ்' (அல்லாஹ்வின் ஒட்டகம்) என்றும், கஃபாவை 'பைத்துல்லாஹ்' (அல்லாஹ்வின் இல்லம்) என்றும், ஒரு அடியாரை 'அப்துல்லாஹ்' (அல்லாஹ்வின் அடியார்) என்றும் சிறப்பிக்கிறானோ, அதேபோல்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தை 'ஷஹ்ருல்லாஹ்' (شهر الله - அல்லாஹ்வின் மாதம்) என்று கண்ணியப்படுத்திக் கூறியுள்ளார்கள்.


​பன்முகம் கொண்ட ஆஷூரா நாள் (முஹர்ரம் 10) மற்றும் அதன் ஆதாரங்கள்
​இந்த முஹர்ரம் மாதத்தின் 10-வது நாளான ஆஷூரா நாள், சாதாரணமான நாள் அல்ல. பன்முகம் கொண்ட, பல பாக்கியங்கள் நிறைந்த நாள்.

 பல நபிமார்கள் தங்களின் வாழ்வில் வெற்றி வாகை சூடிய நாளும், அநீதி இழைத்த எதிரிகள் வேரோடு அழிக்கப்பட்ட நாளும் இதே ஆஷூரா நாள் தான்.

​வரலாற்றில் நிகழ்ந்த இந்த அற்புதங்களை இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் தங்களது 'லதாஇஃபுல் மஆரிஃப்' என்ற நூலிலும், இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தங்களது 'முகாஷஃபத்துல் குலூப்' என்ற நூலிலும், மற்றும் பல விரிவுரையாளர்களும் (முஃபஸ்ஸிரீன்களும்) பதிவு செய்துள்ளார்கள். அந்த வரலாற்று நிகழ்வுகள் இதோ:

​1.ஆதம் (அலை): முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்ட நாள் இந்த ஆஷூரா நாள். (ஆதாரம்: வரலாற்று நூல்கள்)

​2.நூஹ் (அலை): உலகத்தையே அழித்த மாபெரும் பிரளய வெள்ளத்திலிருந்து நூஹ் (அலை) அவர்களின் கப்பல் காப்பாற்றப்பட்டு, ஜூதி மலையில் பத்திரமாகத் தரைதட்டிய நாள். (ஆதாரம்: அஹ்மத் பின் ஹம்பல் அவர்களின் 'முஸ்னத் அஹ்மத்' மற்றும் தப்ரானீ)

3.​ஈஸா (அலை): தந்தை இல்லாமல் அல்லாஹ்வின் வல்லமையால் நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்த நாள். (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலியின் முகாஷஃபத்துல் குலூப்)

​4.இப்ராஹீம் (அலை): சர்வாதிகாரி நம்ரூதால் மூட்டப்பட்ட மாபெரும் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்களை அந்த நெருப்பு சுடாமல், அல்லாஹ்வின் அருளால் சிறு காயமுமின்றி காப்பாற்றப்பட்ட நாள். (ஆதாரம்: வரலாற்று தாரீக் நூல்கள்)

5.​யூனுஸ் (அலை): கடலில் மீன் வயிற்றில் இருந்த யூனுஸ் (அலை) அவர்களின் சமூகம், வரவிருந்த மாபெரும் வேதனையிலிருந்து முழுமையாகக் காப்பாற்றப்பட்ட நாள். (ஆதாரம்: தப்ஸீர் நூல்கள்)

​6.அய்யூப் (அலை): நீண்டகாலம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபி அய்யூப் (அலை) அவர்களின் துன்பம் நீக்கப்பட்டு, மீண்டும் சுகம் அளிக்கப்பட்ட நாள். (ஆதாரம்: இப்னு அஸாகிர்)

7.​யஃகூப் (அலை): அருமை மகனைப் பிரிந்த துயரத்தில் அழுது அழுது கண் பார்வை இழந்த யஃகூப் (அலை) அவர்கள், துஆ கேட்டு மீண்டும் கண்பார்வை பெற்ற நாள். (ஆதாரம்: முகாஷஃபத்துல் குலூப்)

​8.யூசுப் (அலை): சொந்த சகோதரர்களாலேயே வஞ்சிக்கப்பட்டு இருண்ட கிணற்றில் தள்ளப்பட்ட யூசுப் (அலை) அவர்கள், அந்தப் பாழடைந்த கிணற்றிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்ட நாள். (ஆதாரம்: தாரீக் நூல்கள்)

9.​பிர்அவுனின் வீழ்ச்சி: கொடுங்கோலன் பிர்அவுனின் சூனியக்காரர்கள், மூஸா (அலை) அவர்களிடம் தோற்கடிக்கப்பட்ட நாள். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர்)

​10.மூஸா (அலை) வெற்றி: பிர்அவுன் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு, மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும் காப்பாற்றப்பட்ட நாள். (ஆதாரம்: மிகவும் வலுவான ஸஹீஹ் புகாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்கள்)

​11.ஹுஸைன் (ரலி) ஷஹாதத்: நபிகளாரின் அருமைப் பேரன் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட (ஷஹீதாக்கப்பட்ட) நாளும் இதே ஆஷூரா நாள் தான். (ஆதாரம்: இப்னு கஸீர் அவர்களின் 'அல்-பிதாயா வந்நிஹாயா' மற்றும் தபரீ)

​ஆஷூரா நோன்பின் பின்னணி
​நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது, அங்குள்ள யூதர்கள் இந்த ஆஷூரா நாளில் நோன்பு வைப்பதைக் கண்டார்கள். "ஏன் இந்த நாளில் நோன்பு வைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "அன்றுதான் மூஸா (அலை) அவர்கள் வெற்றி பெற்று பிர்அவுன் அழிக்கப்பட்டான். அந்த நன்றிக்காக நாங்கள் நோன்பு வைக்கிறோம்" என்றனர். (ஸஹீஹ் புகாரி)

​அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களை விட நாமே மூஸா (அலை) அவர்களுக்கு அதிக உரிமை உள்ளவர்கள்" என்று கூறிவிட்டு, முஸ்லிம்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். மேலும் யூதர்களுக்கு நாம் மாறு செய்ய வேண்டும் என்பதற்காக,

 "يوم عاشوراء أمر بصيامه قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى قال رسول الله فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع" 

(அடுத்த ஆண்டு நான் உயிருடன் இருந்தால், யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு வைப்பேன்) என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

​மூஸா (அலை) சந்தித்த சோதனைகளும், இறுதி வெற்றியு

​சகோதரர்களே, ஆஷூரா நாளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வான மூஸா (அலை) அவர்களின் வரலாற்றை நாம் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும்.

 அன்றைய எகிப்து நாட்டை ஆண்ட பிர்அவுன் மாபெரும் சர்வாதிகாரி. அவன் மக்களிடையே 'உயர்ந்தவர், தாழ்ந்தவர்' என்று பிரிவினை செய்து அநியாயமாக ஆட்சி செய்தான். 

இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கினான். உச்சகட்டமாக "நான் தான் உங்களின் மிக உயர்ந்த கடவுள்" என்று ஆணவம் கொண்டான். 

தனது ஆட்சிக்கு இஸ்ரவேலர்களால் ஆபத்து வரும் என்று ஜோதிடர்கள் சொன்னதால், இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஈவிரக்கமின்றிக் கொலை செய்தான்.

​ஆனால் அல்லாஹ்வின் திட்டத்தை யாரால் வெல்ல முடியும்? அந்த இருண்ட சூழ்நிலையில்தான் மூஸா (அலை) அவர்கள் பிறக்கிறார்கள்.

 அக்குழந்தையைப் பாதுகாக்க அல்லாஹ் ஒரு தந்திரம் செய்தான். தாயின் உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்தி, "பயப்பட வேண்டாம், குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நதியில் மிதக்க விடுங்கள்" என்று கட்டளையிட்டான். 

எந்த பிர்அவுன் ஆண் குழந்தைகளையெல்லாம் தேடித் தேடிக் கொன்றானோ, அதே பிர்அவுனின் அரண்மனைக்குள்ளேயே மூஸா (அலை) அவர்களை வளரச் செய்தான் அல்லாஹ்!

 பிர்அவுனுக்கும், அவனது அமைச்சர் ஹாமானுக்கும் தப்பியது குழந்தை. குழந்தை வேறு எந்தப் பெண்ணிடமும் பால் குடிக்க மறுத்ததால், அல்லாஹ் மீண்டும் மூஸாவின் தாயிடமே குழந்தையைக் கொண்டு சேர்த்துப் பால் புகட்டச் செய்தான்.


​மத்யன் நகரப் பயணமும், அற்புதமான துஆவும்

​மூஸா (அலை) வாலிப வயதை அடைந்ததும், ஒருநாள் இஸ்ரவேலர் ஒருவருக்கும் எகிப்தியர் ஒருவருக்கும் நடந்த சண்டையை விலக்கப் போனார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களின் குத்தில் அந்த எகிப்தியர் மரணிக்க நேரிட்டது. இதனால் பிர்அவுனின் படையிடமிருந்து தப்பிக்க, மூஸா (அலை) அவர்கள் எகிப்தை விட்டு 'மத்யன்' நகரை நோக்கிப் பயணித்தார்கள்.
​மத்யன் நகரின் நீரூற்றுக்கு அருகில் அவர்கள் சென்றபோது, கூட்டத்தினர் தங்கள் ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருக்க, இரண்டு பெண்கள் மட்டும் தங்கள் ஆடுகளுடன் கூட்டத்தில் செல்ல முடியாமல் ஒதுங்கி நிற்பதைக் கண்டார்கள். அவர்களின் நிலைமைக்கு இரங்கி, அந்தப் பெண்களின் ஆடுகளுக்கும் மூஸா (அலை) அவர்களே நீர் புகட்டி உதவினார்கள். அந்தத் தருணத்தில் எந்த ஆதரவும் இன்றி தனிமையில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து மூஸா (அலை) அவர்கள் ஒரு அற்புதமான துஆவைக் கேட்டார்கள்:

"فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰ إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ"

(அவர்களுக்கு நீர் புகட்டிவிட்டு நிழலை நோக்கிச் சென்று, "என் இறைவா! நீ எனக்கு இறக்கி அருளும் எந்த ஒரு நல்லறத்திற்கும் நான் தேவையுள்ள ஏழையாக இருக்கிறேன்" என்று துஆ செய்தார்கள்).

​அவர்களின் நற்குணத்தைப் பார்த்த அந்தப் பெண்கள், தங்கள் தந்தை ஷுஐப் (அலை) அவர்களிடம் கூறினார்கள். அவர் மூஸாவை அழைத்து, 8 முதல் 10 ஆண்டுகள் தனக்காகப் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு, தன் மகள்களில் ஒருவரை மூஸாவுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

​நுபுவ்வத்தும், பிர்அவுனின் வீழ்ச்சியும்

​நிபந்தனைக் காலம் முடிந்து மூஸா (அலை) அவர்கள் தன் குடும்பத்துடன் எகிப்துக்குத் திரும்பும் வழியில் 'தூர்' மலையின் திசையில் ஒரு ஒளியைக் கண்டார்கள். அங்குதான் அல்லாஹ் அவர்களோடு பேசி அவர்களை நபியாகத் தேர்ந்தெடுத்தான். 
கீழே போட்டால் தடியாகும் பாம்பு, 
சட்டைப் பைக்குள் (விலாப் புறத்தில்) விட்டு எடுத்தால் பிரகாசமாக ஒளிரும் கை ஆகிய அற்புதங்களை வழங்கினான். 

"என் சகோதரர் ஹாரூனையும் எனக்குத் துணையாக ஆக்குவாயாக" என்று அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக்கொண்டு பிர்அவுனிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லச் சென்றார்கள்.

​பிர்அவுன் மூஸாவைத் தோற்கடிக்க, தன் நாட்டின் பெரும் சூனியக்காரர்களைத் திரட்டினான். ஆனால் மூஸா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறி அனைத்தையும் விழுங்கியதைக் கண்ட சூனியக்காரர்கள், இது மனிதச் செயல் அல்ல என்பதை உணர்ந்து, பிர்அவுனுக்கு முன்னாலேயே உடனே இஸ்லாத்தை ஏற்றார்கள். ஆத்திரமடைந்த பிர்அவுன், "எனக்கு மாறு செய்கிறீர்களா?" என்று கூறி அவர்களின் கை, கால்களை மாறு கையாக, மாறு காலாக வெட்டிச் சித்திரவதை செய்தான் (மாட்டின் கால்களை வெட்டுவது போல). ஆயினும் அந்தச் சூனியக்காரர்கள், ஈமானில் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்றார்கள்.


செங்கடல் பிளந்த அற்புதமும், பிர்அவுனின் அகோர மரணமும்!

பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு மூஸா (அலை) அவர்கள் நள்ளிரவில் தப்பிச் சென்றார்கள். பொழுது விடிந்ததும் இதையறிந்த பிர்அவுன், வெறிபிடித்தவனைப் போல தனது மாபெரும் ராணுவத்தைத் திரட்டிக்கொண்டு அவர்களைத் துரத்தி வந்தான்.

ஓடிச் சென்ற பனூ இஸ்ரவேலர்களின் பயணம் செங்கடலின் கரையில் வந்து நின்றது. முன்னால் மாபெரும் கடல், பின்னால் புழுதிப் படலத்தைக் கிளப்பிக்கொண்டு வரும் பிர்அவுனின் கொடிய படை. நடுவில் சிக்கிக்கொண்ட பனூ இஸ்ரவேலர்கள் பயத்தில் அலறினார்கள்.

"إِنَّا لَمُدْرَكُونَ" "நிச்சயமாக நாம் பிடிபட்டுவிட்டோம்!" (சூரா ஷுஅரா: 61).

மூஸா (அலை) அவர்களின் அசையாத ஈமான்: மக்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிய அந்த மரணத் தருவாயில், மூஸா (அலை) அவர்கள் துளியும் கலங்கவில்லை. அவர்களின் உதடுகள் ஈமானின் உச்சத்தில் நின்று அந்த அற்புதமான வார்த்தையை (துஆவை) முழங்கின:

"كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ"

"ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னோடு இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்!" (சூரா ஷுஅரா: 62).

 

செங்கடல் பிளந்தது: உடனே அல்லாஹ்வின் கட்டளை பிறந்தது: "மூஸாவே! உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக!" அடித்த மறுகணம், செங்கடல் பன்னிரண்டு பாதைகளாகப் பிளந்தது. பிளந்த ஒவ்வொரு தண்ணீர் சுவரும் பெரும் மலையைப் போல (كَالطَّوْدِ الْعَظِيمِ) அசையாமல் நின்றது. பனூ இஸ்ரவேலர்கள் அந்தப் பாதையின் வழியாகப் பத்திரமாக மறுகரையை அடைந்தனர்.

பிர்அவுனின் மரணமும், ஜிப்ரீல் (அலை) அவர்களின் கோபமும்: 

ஆணவம் கண்ணை மறைக்க, "கடல் எனக்காகவே வழிவிட்டுள்ளது" என்று கூறிக்கொண்டு பிர்அவுனும் அவனது படையினரும் அதே பாதையில் கடலுக்குள் இறங்கினர். அவர்கள் அனைவரும் கடலின் நடுப்பகுதிக்கு வந்ததும், அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகளாக நின்ற தண்ணீர் அப்படியே அவர்கள் மீது சரிந்து மூடியது.

மரணம் தொண்டைக்குழியை அடைந்த அந்த நிமிடத்தில், தப்பிக்க வழியே இல்லை என்பதை உணர்ந்த பிர்அவுன் கதறினான்:

"آمَنتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ" "இஸ்ரவேலர்கள் ஈமான் கொண்டுள்ளவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் ஈமான் கொள்கிறேன்; நானும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவன் (முஸ்லிம்) ஆகிறேன்." (சூரா யூனுஸ்: 90).

ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் "நான்தான் உயர்ந்த கடவுள்" என்று ஆணவம் கொண்ட அந்தப் பாவியின் தௌபாவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தருணத்தில் நடந்த ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'முஹம்மதே! கடலின் கறுப்புச் சகதியை அள்ளி பிர்அவுனின் வாயில் நான் அடைத்ததை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! அல்லாஹ்வின் ரஹ்மத் (கருணை) அந்தப் பாவியை வந்தடைந்து விடுமோ என்ற பயத்தில் (கோபத்தில்) நான் அவ்வாறு செய்தேன்'." (நூல்: திர்மிதி).

ஜிப்ரீல் (அலை) அவர்கள் சகதியை அள்ளி வாயில் அடைக்க, பிர்அவுன் மூச்சுத் திணறித் துடிதுடித்துக் கடலுக்குள் செத்தான். அவனது தௌபாவிற்கு அல்லாஹ் அளித்த இறுதிப் பதில் இதுதான்:

"آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ" 

"இப்போதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்)? இதற்கு முன்வரை நீ பாவியாக, குழப்பவாதியாக அல்லவா இருந்தாய்!" (சூரா யூனுஸ்: 91).

மாபெரும் வெற்றி: 

பிர்அவுனும் அவனது மாபெரும் ராணுவமும் அலைகடலில் மூழ்கடிக்கப்பட்டனர். பிர்அவுனின் உடல் மட்டும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகக் கரையில் ஒதுக்கப்பட்டது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு, பலகீனமானவர்களாக இருந்த பனூ இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் ஆஷூரா நன்னாளில் மாபெரும் வெற்றியை அளித்து கௌரவித்தான்!


​கண்ணியத்திற்குரியவர்களே!

ஆஷூரா நாள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால், சோதனைகள் வரும்போது மூஸா (அலை) அவர்களைப் போல அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்த வேண்டும். எத்தனை பிர்அவுன்கள் வந்தாலும் அல்லாஹ்வின் உதவி முஃமின்களுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே இந்த ஆஷூரா நாளின் சிறப்பை உணர்ந்து, நோன்பு நோற்று அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோமாக!

ஆஷூரா நாளில் நாம் செய்ய வேண்டிய 3 மிக முக்கியமான அமல்கள்

கண்ணியத்திற்குரியவர்களே! முஹர்ரம் மாதத்தின் 10-வது நாளான ஆஷூரா நாள், பல நபிமார்கள் வெற்றி பெற்ற நாள் மட்டுமல்ல; நாமும் நமது வாழ்வில் நன்மைகளை அள்ளிக்குவிப்பதற்கான மிகச் சிறந்த நாளாகும். இந்த ஆஷூரா நாளில் நாம் தவறவிடக் கூடாத மூன்று மிக முக்கியமான அமல்கள் உள்ளன.

1. ஆஷூரா நோன்பு நோற்பது (பாவங்களைப் போக்கும் அமல்)

ஆஷூரா நாளின் மிக முக்கியமான சுன்னத் நோன்பு நோற்பதாகும். யூதர்களுக்கு மாறு செய்வதற்காக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு வைப்பது நபிவழியாகும். இந்த நோன்பின் சிறப்பைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது:

"ஆஷூரா நாளில் நோற்கப்படும் நோன்பானது, கடந்த ஓராண்டு காலப் பாவங்களுக்குப் பரிகாரமாக (அதாவது சிறு பாவங்களை அழித்துவிடும் என) அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன்." (நூல்: முஸ்லிம்)

எந்த ஒரு சிரமமும் இல்லாமல், ஒரு நாள் நோன்பு வைப்பதன் மூலம் முந்தைய ஒரு வருடப் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்றால், இந்த மாபெரும் பாக்கியத்தை நாம் எப்படித் தவறவிட முடியும்?

2. குடும்பத்திற்குத் தாராளமாகச் செலவழித்தல் (பரக்கத்தைப் பெற்றுத்தரும் அமல்)

ஆஷூரா நாளில் நாம் செய்ய வேண்டிய இரண்டாவது முக்கியமான அமல், அன்றைய தினம் நம்முடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்குத் தாராளமாகப் பொருளைச் செலவழிப்பதாகும். அன்றைய தினம் வீட்டில் நல்ல உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது, குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிக் கொடுப்பது போன்ற விஷயங்களில் தாராளம் காட்ட வேண்டும்.

இதற்கு மார்க்கத்தில் வலுவான அடிப்படை உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது:

"مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ" 

"யார் ஆஷூரா நாளில் தன் குடும்பத்தாருக்குத் தாராளமாகச் செலவழிக்கிறாரோ, அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் விசாலமான வாழ்வாதாரத்தை (ரிஸ்கை) வழங்குவான்." (நூல்: தப்ரானீ, பைஹகீ)

ஹதீஸ் கலையின் மாபெரும் இமாம்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றிக் கூறும்போது, "நாங்கள் இந்த அமலை ஐம்பது, அறுபது வருடங்களாகத் தொடர்ந்து சோதித்துப் பார்த்தோம். (ஆஷூரா நாளில் குடும்பத்திற்குத் தாராளமாகச் செலவழித்தோம்). அதன் பரக்கத்தினால் அந்த வருடம் முழுவதும் எங்களுக்கு நல்லதே கிடைத்தது; எந்தக் குறையும் ஏற்படவில்லை" என்று ஆச்சரியத்துடன் பதிவு செய்துள்ளார்கள். எனவே, அன்றைய தினம் கஞ்சத்தனம் செய்யாமல் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.

3. மனமுருகி துஆச் செய்தல் (தேவைகளை நிறைவேற்றும் அமல்)

ஆஷூரா நாளில் நாம் செய்ய வேண்டிய மூன்றாவது மிக முக்கியமான அமல், அல்லாஹ்விடம் கையேந்தி துஆ கேட்பதாகும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இதே ஆஷூரா நாளில்தான் மூஸா (அலை) அவர்கள் கடலுக்கு முன்னால் நின்று துஆக் கேட்டார்கள், அல்லாஹ் செங்கடலைப் பிளந்து வழிகாட்டினான். இதே நாளில்தான் யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றில் இருளில் இருந்து துஆக் கேட்டார்கள், அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான். இதே நாளில்தான் அய்யூப் (அலை) அவர்கள் நோயின் பிடியிலிருந்து கண்ணீரோடு துஆக் கேட்டார்கள், அல்லாஹ் அவர்களுக்குப் பூரண சுகத்தைக் கொடுத்தான்.

எத்தனையோ நபிமார்களின் கண்ணீரால் கேட்கப்பட்ட துஆக்களுக்கு அல்லாஹ் உடனடியாகப் பதிலளித்த நாள் இந்த ஆஷூரா நாள். எனவே, அன்றைய தினம் நோன்பு வைத்து, இப்தாருடைய நேரத்தில் நாம் மனமுருகி துஆ கேட்க வேண்டும்.

  "யா அல்லாஹ்! நபிமார்களின் துஆக்களை ஏற்றுக்கொண்டது போல, என் தேவைகளையும் நிறைவேற்றித் தா, என் கடன்களை அடைக்க வழிகாட்டிக் கொடு, என் பாவங்களை மன்னித்துவிடு" என்று கேட்டால், அந்த ரஹ்மான் நிச்சயமாக நம்முடைய துஆக்களையும் அங்கீகரிப்பான்.

இந்த மூன்று சிறப்பான அமல்களையும் இந்த ஆஷூரா நாளில் நாமும் செய்து, நம்முடைய குடும்பத்தாரையும் செய்யச் சொல்லி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையையும், பரக்கத்தையும் பெறுவோமாக!


​


இப்படிக்கு,

தங்களுடைய துஆவை ஆதரவு வைக்கும்,

M. முகமது ரபீக் மிஸ்பாஹி,

இமாம், மேலப்பள்ளிவாசல், ராஜபாளையம்.

▶️ Rajai Aalim Media (YouTube சேனல்)

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...