Thursday, 30 July 2026

போதை எனும் மாயவலையும், சீரழியும் இளைய சமுதாயமும் - இளைஞர்களை மீட்டெடுப்போம்!

 போதை எனும் மாயவலையும், சீரழியும் இளைய சமுதாயமும் - இளைஞர்களை மீட்டெடுப்போம்!



إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ... أَمَّا بَعْدُ:

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இன்றைய ஜும்ஆ மேடையில், நமது சமுதாயத்தின் ஆணிவேரான இளைஞர்களைச் சத்தமில்லாமல் அரித்துக்கொண்டிருக்கும் ஒரு மாபெரும் கொடிய அரக்கனைப் பற்றிப் பேசவிருக்கிறோம். ஒரு சமுதாயம் சீர்பட வேண்டும் என்றால், முதலில் அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் சீர்பட வேண்டும். இளைஞர்கள் சீராகிவிட்டால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீராகிவிடும். ஆனால், இன்று நம்முடைய இளைஞர்களின் நிலை என்ன? என்று சிந்தித்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

1.கண்ணியமான சமுதாயமா? சாக்கடையில் விழும் சமுதாயமா?

என் அருமை இளைஞர்களே! முதலில் ஒரு விஷயத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் யார்? அல்லாஹ் நம்மை எவ்வளவு கண்ணியமான மார்க்கத்தில் வைத்திருக்கிறான்!

திருக்குர்ஆனில் அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கூறுகிறான்:

"كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ" 

"மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள், தீமையைத் தடுக்கிறீர்கள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்." (சூரா ஆல இம்ரான்: 110).

எவ்வளவு பெரிய அந்தஸ்து இது! இந்த உலகிற்கே வழிகாட்ட வேண்டிய கண்ணியமான மார்க்கம் நம்முடையது. உன்னதமான ஒரு வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களாக அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆனால், இப்படிப்பட்ட கண்ணியமான சமுதாயத்தைச் சேர்ந்த நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

பள்ளிக்குப் போகும் சிறுவனிலிருந்து, கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்கள் வரை கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள், கூல் லிப் (Cool Lip) எனப் பலவிதமான ரசாயனப் போதைகளுக்கு அடிமையாகி, சுயநினைவை இழந்து, தெருக்களிலும் சாக்கடைகளிலும் விழுந்து கிடக்கிறோமே... இது நமக்கு நாமே செய்துகொள்ளும் எவ்வளவு பெரிய அநியாயம்? அல்லாஹ் தந்த கண்ணியத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இழிவான செயல் அல்லவா இது?

இளைஞர்களே! நாம் பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக இருந்தால் போதாது. மார்க்கத்தில் அரைகுறையாக இருக்கக் கூடாது. அல்லாஹ் திருமறையில் மிகத் தெளிவாகக் கட்டளையிடுகிறான்:

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ" 

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்." (சூரா அல்-பகரா: 208).

ஜும்ஆவிற்கு மட்டும் பள்ளிவாசலுக்கு வருவதும், வெளியே சென்றால் ஷைத்தானின் வழியான போதைக்கும், பாவமான காரியங்களுக்கும் செல்வதும் ஒரு முஃமினுக்கு அழகல்ல. நாம் முழுமையாக இஸ்லாத்திற்குள் நுழைய வேண்டும்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை ஒருபோதும் பின்பற்றக் கூடாது!

2. போதை: அனைத்துப் பாவங்களின் தாய்! (أُمُّ الْخَبَائِثِ)

போதைப்பழக்கம் என்பது ஏதோ உடலைக் கெடுக்கும் ஒரு சாதாரணப் பழக்கம் அல்ல. அது மனிதனை மிருகமாக மாற்றும் ஒரு சாவி. நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் போதையை எப்படிக் குறிப்பிடுகிறார்கள் தெரியுமா?

"الْخَمْرُ أُمُّ الْخَبَائِثِ" "மது (போதை) அனைத்துத் தீமைகளுக்கும் (பாவங்களுக்கும்) தாயாகும்!" (நூல்: தப்ரானி).

இதற்கு உஸ்மான் (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்கள் கூறும் ஒரு வரலாற்றுச் சம்பவம் நெஞ்சை உலுக்கக்கூடியது: முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நல்ல மனிதரை, ஒரு கெட்ட நடத்தை உள்ள பெண் தன் சூழ்ச்சியால் ஒரு அறைக்குள் அடைத்துவிட்டாள். அங்கே ஒரு குழந்தையும், ஒரு கோப்பை மதுவும் இருந்தது. அவள் அந்த மனிதரிடம், "ஒன்று, நீ என்னோடு விபச்சாரம் செய்ய வேண்டும். அல்லது இந்தக் குழந்தையைக் கொலை செய்ய வேண்டும். அல்லது இந்தக் கோப்பையில் உள்ள மதுவைக் குடிக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்றைச் செய்தால்தான் உன்னை உயிரோடு விடுவேன்" என்றாள்.

அந்த மனிதர் சிந்தித்தார். "விபச்சாரம் மாபெரும் பாவம், கொலையோ அதைவிடப் பெரும் பாவம். சரி, மது குடிப்பது இந்த இரண்டை விடக் குறைவான பாவம்தானே" என்று எண்ணி மதுவைக் குடித்தார். போதை தலைக்கேறியது. நிதானம் இழந்த அவர், அந்தப் பெண்ணோடு விபச்சாரமும் செய்தார், அது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையையும் கொடூரமாகக் கொன்றுவிட்டார்! (நூல்: சுனன் நஸாயீ).

இளைஞர்களே சிந்தித்துப் பாருங்கள்! போதை உள்ளே சென்றால், மார்க்கம் நமக்குத் தந்த கண்ணியமும் ஈமானும் வெளியேறிவிடும்.

3. சஹாபாக்களின் மாபெரும் தியாகம்: மதீனாவின் வீதிகளில் ஓடிய மது!

சிலர் சொல்வார்கள், "என் பிள்ளை போதைக்கு அடிமையாகிவிட்டான், இனி அவனைத் திருத்தவே முடியாது" என்று. ஆனால், இஸ்லாமிய வரலாறு ஒரு மாபெரும் திருப்புமுனையைக் காட்டுகிறது.

இஸ்லாத்திற்கு முன் அரபுகள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? காலையில் எழுந்தால் மது, இரவில் தூங்கும் முன் மது எனப் போதைக்கு முழுமையாக அடிமையாகிக் கிடந்த சமுதாயம் அது. அப்படிப்பட்ட சமுதாயத்திடம், இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே "மது ஹராம்" என்று சொல்லவில்லை. படிப்படியாக உளவியல் ரீதியாக அவர்களைத் தயார்படுத்தி, இறுதியாக அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ" 

"நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் செயலுமாகும். எனவே, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்போதே நீங்கள் வெற்றியடைவீர்கள்." (சூரா அல்-மாயிதா: 90).

இந்த வசனம் இறங்கிய அந்த நாளின் காட்சி எப்படி இருந்தது தெரியுமா? அனஸ் (رَضِيَ اللَّهُ عَنْهُ) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் பலருக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது வீதியில் ஒருவர், 'மது ஹராமாக்கப்பட்டுவிட்டது' என்று சத்தமிட்டபடி சென்றார்."

அபூதல்ஹா (ரலி) அவர்கள் உடனே என்னிடம், "அனஸே! அந்த மதுக் குடுவைகளை வெளியே ஊற்றி உடைத்துவிடு" என்றார்கள். அவர்கள் யாரும் "இது உண்மையா? இது என்ன திடீர் சட்டம்? காசு கொடுத்து வாங்கியதாயிற்றே?" என்று ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுக் குடுவைகளெல்லாம் உடைத்தெறியப்பட்டன. மதீனாவின் வீதிகளில் மழைத் தண்ணீரைப் போல மதுபானம் ஆறாக ஓடியது! (நூல்: ஸஹீஹ் புகாரி).

4. சஹாபாக்களின் ஈமான் எப்படி மாறியது? நபிகளாரின் மாபெரும் உழைப்பு!

இந்த இடத்தில் நாம் ஒரு மாபெரும் உண்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அறியாமைக் காலமான 'அய்யாமுல் ஜாஹிலிய்யா'வில் எப்படி இருந்தார்கள் இந்த சஹாபாக்கள்? மதுவும், விபச்சாரமும், கொலையும், கொள்ளையும் சர்வ சாதாரணமாக இருந்த கொடூரமான காலமது. அப்படிப்பட்டவர்கள், ஒரே ஒரு கட்டளையைக் கேட்டவுடன் அத்தனை மதுக் குடுவைகளையும் வீதியில் தூக்கி எறிந்தார்கள் என்றால், எப்படி அவர்களின் ஈமான் இவ்வளவு உயர்ந்ததாக மாறியது? எப்படி சாத்தியமானது இந்த மாபெரும் மாற்றம்?

சாதாரணமாக ஒரே நாளில் அவர்களின் ஈமான் இவ்வளவு பலம் பெற்றுவிடவில்லை! இதற்குப் பின்னால் அண்ணல் நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் 13 வருடங்களாக மக்காவிலும், மதீனாவிலும் சிந்திய வியர்வையும், அவர்களின் உள்ளங்களில் ஈமானை விதைக்கச் செய்த மாபெரும் உழைப்பும் (தர்பிய்யா) இருக்கிறது. அவர்களின் இதயங்களில் ஈமானின் உரத்தை நபிகளார் ஆழமாகப் பாய்ச்சினார்கள்.

இன்று நம்மில் பல இளைஞர்கள் தடம் மாறுகிறார்கள் என்றால், அவர்களைத் திட்டுவதற்கு முன் நாம் சிந்திக்க வேண்டும்... நபிகளார் சஹாபாக்களிடம் செய்த அந்த உழைப்பு இன்று நம்மில் இருக்கிறதா? நம் பிள்ளைகளின் உள்ளங்களில் ஈமானை விதைக்க நாம் என்ன உழைப்பைச் செய்தோம்?

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த உழைப்பு நம்மிடத்திலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். தடம் மாறிய இளைஞர்களை நாம் திரும்பத் திரும்பச் சந்தித்து, அவர்களிடம் மார்க்கத்தின் அழகை எடுத்துக்கூறி, அவர்களின் உள்ளங்களில் ஈமானின் உரத்தை நாம் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தால், சஹாபாக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட அதே மாற்றம் இந்த இளைஞர்களின் உள்ளத்திலும் ஏற்படும். நிச்சயம் நம்முடைய இளைஞர்களும் சஹாபாக்களைப் போன்று உன்னதமானவர்களாக மாறுவார்கள்! நாமும் சஹாபாக்களைப் போன்ற மாபெரும் ஈமானைப் பெற முடியும்! இன்ஷா அல்லாஹ்!

5. தக்வா (இறையச்சம்) இருந்தால் மாயவலைகள் அறுபடும்!

இளைஞர்களே! ஒரு மனிதனுடைய உள்ளத்தில் இறையச்சம் (தக்வா) வந்துவிட்டால், இந்த உலகத்தில் எந்தப் போதையும், எந்தப் பாவமும் அவனை வீழ்த்த முடியாது.

திருக்குர்ஆன் காட்டும் யூசுப் (அலை) அவர்களின் வரலாற்றை எண்ணிப் பாருங்கள். இளமை முறுக்கு, உலகமே வியக்கும் பேரழகு! ஒரு மாபெரும் நாட்டின் அமைச்சரின் மனைவி, ஒரு இளைஞனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக் கதவுகளைப் பூட்டுகிறாள். விபச்சாரத்திற்கு அழைக்கிறாள். அந்த இக்கட்டான சூழ்நிலையில், யாருமே இல்லாத அந்த அறையில் ஒரு இளைஞன் நினைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

ஆனால் யூசுப் (அலை) அவர்கள் அந்த அழகிய பெண்ணைப் பார்த்து என்ன சொன்னார்கள்?

"مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ" 

"அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்! நிச்சயமாக என் இறைவன் எனக்கு அழகிய இருப்பிடத்தைத் தந்திருக்கிறான்." (சூரா யூசுப்: 23).

என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினார்கள். அந்த ஈமானின் வீரியம், அந்த இறையச்சம் நம் இளைஞர்களுக்கு வர வேண்டாமா?

அபூபக்கர் அல்-மிஸ்க் (ரஹ்) அவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு:

இறைநேசச் செல்வர்களின் வாழ்வில் நடந்த ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் இது. அபூபக்கர் அல்-மிஸ்க் (ரஹ்) என்றொரு பெரியார் இருந்தார். அவர் வாலிபராக இருந்தபோது, அவருடைய அழகைக் கண்ட ஒரு பெண், அவரை ஏமாற்றித் தன் வீட்டிற்குள் அழைத்துக் கதவைப் பூட்டிவிட்டாள். விபச்சாரத்திற்கு அழைத்தாள், இல்லையென்றால் சத்தம்போட்டு ஊரைக் கூட்டிவிடுவேன் என்று மிரட்டினாள்.

அந்த வாலிபர் யோசித்தார். அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்பிக்க என்ன செய்வது? உடனே அந்தப் பெண்ணிடம், "நான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்" என்றார். கழிப்பறைக்குச் சென்று, அங்கிருந்த மனித மலத்தை அள்ளித் தன் உடல் முழுவதும், முகம் முழுவதும் பூசிக்கொண்டு அந்தப் பெண்ணின் முன் வந்து நின்றார்!

அந்த அருவருப்பான தோற்றத்தையும், குடலைப் புரட்டும் நாற்றத்தையும் பொறுக்க முடியாத அந்தப் பெண், "பைத்தியக்காரா, வெளியே போ" என்று அவரை வீட்டை விட்டே விரட்டிவிட்டாள். அல்லாஹ்வுக்காக, விபச்சாரம் என்ற ஹராமான வலையிலிருந்து தப்பிக்க, தன் உடலையே மலத்தால் அசுத்தப்படுத்திக் கொண்டார் அந்த இளைஞர்!

இதற்கு அல்லாஹ் கொடுத்த கூலி என்ன தெரியுமா? அன்று அவர் குளித்து சுத்தமான பிறகு, அவர் உடலிலிருந்து 'கஸ்தூரி' (Musk - அரபியில் மிஸ்க்) வாசம் வீசத் தொடங்கியது. அவர் மரணிக்கும் வரை, அவர் நடந்து சென்றால் அந்தத் தெரு முழுவதும் கஸ்தூரி வாசம் வீசும். அதனால்தான் அவருக்கு 'அபூபக்கர் அல்-மிஸ்க்' என்ற பெயரே வந்தது!

இளைஞர்களே சிந்தித்துப் பாருங்கள்! அன்று அவர்கள் அல்லாஹ்வுக்காகப் பாவங்களிலிருந்து தப்பிக்க அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தார்கள். இன்று உங்கள் முன்னால் கஞ்சா, போதை மாத்திரைகள், தீய நண்பர்கள் என்ற மாயவலை விரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் உள்ளத்தில் மட்டும் அல்லாஹ்வைப் பற்றிய பயம் (தக்வா) வந்துவிட்டால், எந்தப் போதையாக இருந்தாலும் அதை உங்களால் தூக்கி எறிய முடியும்!

6. இபாதத்துகள் (வணக்கங்கள்) நாசமாகிவிடும்!

ஒரு இளைஞன் போதைப் பொருளைப் பயன்படுத்தினால் அவனுக்கு மார்க்கம் சொல்லும் தண்டனை என்ன தெரியுமா? அவனுடைய எந்த வணக்கமும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது!

நபி (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:

"مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا..." 

"எவன் மது அருந்துகிறானோ (போதைப் பொருளைப் பயன்படுத்துகிறானோ), அவனுடைய தொழுகை நாற்பது நாட்கள் ஏற்றுக்கொள்ளப்படாது." (நூல்: திர்மிதி).

40 நாட்கள் தொழுகை அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவனுடைய நோன்பு, தர்மம் எந்த இபாதத்திற்கும் எந்தப் பலனும் இல்லை. ஒருவேளை அவன் போதையிலேயே மரணித்துவிட்டால், அவன் ஈமானோடு மரணிக்க மாட்டான்.

7. பிள்ளைகளை எப்படி மீட்டெடுப்பது? (பெற்றோருக்கான உளவியல் தீர்வுகள்)

கண்ணியத்திற்குரியவர்களே! போதைக்கு அடிமையான பிள்ளைகளைத் திட்டுவதாலோ, வீட்டை விட்டுத் துரத்துவதாலோ அவர்கள் திருந்திவிட மாட்டார்கள். அது அவர்களை இன்னும் பெரிய குற்றவாளிகளாகத்தான் மாற்றும்.

  • நண்பர்களைக் கண்காணியுங்கள்: போதை என்பது கடையில் போய் நேரடியாக வாங்குவது கிடையாது. "சும்மா ஒண்ணே ஒண்ணு அடிச்சுப் பாரு மச்சான், ஒன்னும் ஆகாது" என்று சொல்லும் அந்தத் தீய நண்பன்தான் முதல் எதிரி. நபி (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் சொன்னார்கள்: "ஒரு மனிதன் தன் நண்பனின் வழியில் இருக்கிறான்." பெற்றோர்களே! உங்கள் மகனின் நண்பர்கள் யார் என்பதைக் கண்காணியுங்கள்.

  • தனிமையைத் தவிர்த்து, அன்பைக் காட்டுங்கள்: பிள்ளைகள் எந்நேரமும் அறையைப் பூட்டிக்கொண்டு இருப்பதையும் அனுமதிக்காதீர்கள். அவர்கள் போதைக்கு அடிமையாவது ஒரு நோய். ஒரு நோயாளிக்கு எப்படி வைத்தியம் பார்ப்போமோ, அதேபோல அவர்களை மனநல மருத்துவர்களிடமும், மறுவாழ்வு மையங்களிலும் (Rehab) சேர்த்துக் காப்பாற்றுங்கள்.

8. ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் மாபெரும் கடமை!

இந்தச் சீரழிவைத் தடுப்பது வெறும் பெற்றோரின் வேலை மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த ஜமாஅத்தினுடைய கடமையாகும்.

நான் இங்கே ஜமாஅத் நிர்வாகிகளைப் பார்த்து மிகவும் அன்போடு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். அல்லாஹ் உங்களை ஒரு பள்ளிவாசலின் தலைவராகவோ, நிர்வாகஸ்தராகவோ தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால், அது சாதாரணப் பதவி அல்ல! உங்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்ததற்கான முழு நோக்கமே, இந்தச் சமுதாயத்தில் நடக்கும் தீமைகளை நீங்கள் தடுத்து நிறுத்தி, நன்மையை நிலைநாட்டுவீர்கள் என்பதற்காகத்தான்.

நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் கூறினார்கள்:

"مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ..." 

"உங்களில் எவரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைத் தன் கரத்தால் தடுக்கட்டும். அதற்கியலவில்லையாயின் தன் நாவால் (தடுக்கட்டும்). அதற்கும் இயலவில்லையாயின் தன் உள்ளத்தால் (வெறுக்கட்டும்)..." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).

ஆகவே, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது (அம்ரு பில் மஃரூஃப், நஹ்யி அனில் முன்கர்) என்பது ஏதோ விருப்பமிருந்தால் செய்யும் காரியம் அல்ல; அது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள முழு ஆயக் கடமையாகும். நம் கண்முன்னே ஒரு இளைஞன் போதையில் சீரழிகிறான் என்றால், அவனைத் தடுத்து நல்வழிப்படுத்த வேண்டிய கடமை அவனுடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜமாஅத்திற்கும், பொதுமக்களுக்கும் இருக்கிறது.

உளவியல் ரீதியான அணுகுமுறை: நமது ஊர் இளைஞர்களில் யாராவது போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவந்தால், அவர்களை ஊரை விட்டுத் தள்ளிவைப்பதோ, விரட்டியடிப்பதோ தீர்வாகாது. அவனும் ஒரு முஸ்லிம்தான். அவனும் நம் சமுதாயப் பிள்ளைதான். போதை என்பது அவனுக்கு வந்திருக்கும் ஒரு கொடிய நோய், அவ்வளவுதான்.

அவனை எப்படி மீட்க வேண்டும் தெரியுமா? ஒருவன் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும்போது அவனிடம் போய் நியாயம் பேசக் கூடாது. அவனுக்கு போதை தெளிந்து, அவன் இயல்பான நிலையில் (Normal) இருக்கும்போது, ஜமாஅத் நிர்வாகிகளோ அல்லது அவனுடைய சொந்தக்காரர்களோ அவனைத் தனியாக அழைக்க வேண்டும். அவனிடம் மிகவும் நாசூக்காகப் பேச வேண்டும். ஒரு தோழனைப் போல, ஒரு அண்ணனைப் போல அவன் தோளில் கைபோட்டு, "தம்பி, நீ எவ்வளவு நல்ல குடும்பத்துல பிறந்தவன், நீ இப்படிச் செய்யலாமா? உனக்கு என்னப்பா பிரச்சனை?" என்று அவனுடைய உள்ளத்தில் இருக்கும் வலியைப் புரிந்துகொண்டு, உளவியல் ரீதியாக அன்பாகப் பேசிப் பாருங்கள். அந்தப் பாசத்தில்தான் அவன் திருந்துவானே தவிர, சபையில் வைத்து அவமானப்படுத்துவதால் அல்ல.

அதேபோல, ஊருக்குள் யார் போதைப் பொருட்களை விற்கிறார்களோ, அவர்களை உலமாக்களோடு இணைந்து, காவல்துறையின் உதவியோடு தடுத்து நிறுத்த வேண்டியது ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தலையாய பொறுப்பாகும்.

9. படிப்பினையும் முடிவுரையும்!

என் அருமை இளைஞர்களே! உங்களின் இளமைப் பருவம் என்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை. உங்களை அல்லாஹ் மிகக் கண்ணியமான இடத்தில் வைத்திருக்கிறான். அதை இந்தச் சாக்கடைப் பழக்கத்திற்காக அழித்துவிடாதீர்கள்.

போதை உங்களுக்கு நிம்மதியைத் தராது, அது உங்கள் மூளையை அழித்து, உங்கள் பெற்றோரின் நிம்மதியைக் குலைத்து, உங்களை நரகத்தின் படுகுழியில் தள்ளிவிடும். இப்போதே அதிலிருந்து வெளியே வாருங்கள். அல்லாஹ் பாவங்களை மன்னிப்பதில் மகா கருணையாளன். உடனே தவ்பா செய்து, பள்ளியை நோக்கி வாருங்கள்.

அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நம்முடைய சமுதாயத்து இளைஞர்களை அத்தனை போதைப் பழக்கங்களிலிருந்தும், தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்தும் பாதுகாப்பானாக! சத்திய மார்க்கத்திற்காக உழைக்கக்கூடிய தீரமிக்க இளைஞர்களாக, பெற்றோரின் கண்களைக் குளிரச் செய்யக்கூடிய நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்.


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.

இப்படிக்கு, 

M. முகமது ரபீக் மிஸ்பாஹி,

 இமாம், மேலப்பள்ளிவாசல், ராஜபாளையம்.

  Rajai Aalim Media

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...