Thursday, 27 August 2026

நபி நேசத்தை நெஞ்சில் வளர்ப்போம்! சதிகளை முறியடிப்போம்!


 உயிருக்கு உயிரான... உயிரினும் மேலான மாநபி (ஸல்)!

நபி நேசத்தை நெஞ்சில் வளர்ப்போம்! சதிகளை முறியடிப்போம்!



إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. أَمَّا بَعْدُ:

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதான நேசத்தைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய உன்னதமான நேரத்தில் நாம் வீற்றிருக்கிறோம். அல்லாஹ் நம்மை அவர்களின் உம்மத்தாகக் கேட்டுப் பெறாமலேயே ஆக்கியிருக்கின்றானே, அந்த ஒன்றிற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் வள்ளல் நபி மீது நேசம் கொண்டிடக் கடமைப் பட்டிருக்கிறோம். அந்த நேசத்திற்கான முக்கிய காரணங்களை இன்று நாம் விரிவாகச் சிந்திப்போம்.

1. நபி நேசத்தைக் குலைக்கும் நவீன சதிகள்!

அன்பானவர்களே! நபிகளார் மீதான நேசத்தைப் பற்றிப் பேசும் இந்த வேளையில், இன்று சமூகத்தில் நடக்கும் ஒரு வேதனையான விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மீதான நேசத்தை மக்கள் மனதில் என்றென்றும் பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான், நமது முன்னோர்களும் உலமாக்களும் 'மௌலூது ஷரீஃப்' போன்ற அழகான நடைமுறைகளை உருவாக்கினார்கள். ஆனால் இன்று, தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சில கூட்டத்தினர், "இந்த உலமாக்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகவும், காசு சம்பாதிப்பதற்காகவும்தான் இந்த மௌலூதை ஓதுகிறார்கள், இது ஹராம், இது ஷிர்க்" என்று மிகக் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். அதோடு நிற்காமல், சமீபத்தில் ஒரு நாடகத்தையே (Drama) வெளியிட்டு உலமாக்களைக் கொச்சைப்படுத்தியுள்ளார்கள். இது ஒட்டுமொத்த உலமாக்களின் மனதையும் மிகவும் காயப்படுத்தியுள்ளது.

உண்மையில் உலமாக்கள் யார்? அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: الْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ "உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்!" (நூல்: அபூதாவூத்).

மக்களின் நெஞ்சங்களில், உங்கள் பிள்ளைகளின் நெஞ்சங்களில் நபிகளாரின் நேசத்தை எப்படியாவது ஆழமாக விதைக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் வாழ்நாளையே மஸ்ஜிதுகளிலும், மதரஸாக்களிலும் அர்ப்பணித்தவர்கள் இந்த உலமாக்கள்.

ஆனால், இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து, நாடகங்கள் போடுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா? இரண்டு கொடிய சதிகள் இதில் மறைந்துள்ளன:

  1. நபியின் கண்ணியத்தைக் குறைப்பது: மக்களின் உள்ளங்களில் மாநபி (ஸல்) அவர்கள் மீதிருக்கும் காதலையும் கண்ணியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, நபியின் மீது எந்தப் பிரியமும், மரியாதையும் இல்லாமல் ஆக்குவது.

  2. பிரிவினையை ஏற்படுத்துவது: உலமாக்களைக் கேவலப்படுத்துவதன் மூலம், உலமாக்களுக்கும் பொதுமக்களுக்கும் மத்தியில், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஆலிம்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிரிவினையை ஏற்படுத்துவது. உலமாக்கள் மீது வெறுப்பு வந்தால், இளைஞர்கள் தானாகவே மார்க்கத்தை விட்டுத் தூரமாகி விடுவார்கள் என்பது அவர்களின் சதி.

இவர்களின் இந்தச் சதிகளை நாம் முறியடிக்க வேண்டும் என்றால், நம் நெஞ்சங்களில் நபிகளாரின் நேசத்தை இன்னும் பன்மடங்கு அதிகமாக வளர்க்க வேண்டும். நாம் ஏன் அந்த நபியை நேசிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பாருங்கள்:

2. ஹிதாயத் எனும் நேர்வழிக்கு ஒளி!

நாம் அறியாமையில் இருந்தபோது நேர்வழிகாட்டியவர்கள் மாநபி (ஸல்) அவர்கள். ஹிஜ்ரி 8-ம் ஆண்டு நடந்த ஹுனைன் யுத்தத்தின் போது, கிடைத்த ஏராளமான கனீமத் (போர்) பொருட்களை, புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குறைஷித் தலைவர்களான இக்ரிமா (ரலி), அபூ சுஃப்யான் (ரலி) போன்றவர்களுக்கு நபிகளார் அதிகமாக வழங்கினார்கள். நீண்டகாலமாகத் துணையாக நின்ற அன்ஸாரிகளுக்கு அவ்வளவாக வழங்கவில்லை.

இதனால் சில அன்ஸாரிகள் மனவருத்தப்பட்டு, "தங்கள் கூட்டத்தாருக்கே நபிகளார் வாரி வழங்குகிறார்கள்" என்று பேசிக்கொண்டனர். இந்தச் செய்தி ஸஅத் இப்னு உப்பாதா (ரலி) மூலமாக நபிகளாருக்குச் சென்றது. உடனே ஒரு தடாகத்தின் அருகே அன்ஸாரிகளை மட்டும் ஒன்று திரட்டினார்கள் நபிகளார்.

அப்போது அண்ணலார் ஆற்றிய உரை அன்ஸாரிகளின் நெஞ்சங்களை மட்டுமல்ல, இன்று வரை நம் நெஞ்சங்களையும் உலுக்குகிறது: "ஓ! அன்ஸாரிகளே! நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் வறியோர்களாக இருந்தீர்கள், என்னைக் கொண்டு உங்களைச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்தீர்கள், என்னைக் கொண்டு உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்."

அன்ஸாரிகள், "ஆம், அல்லாஹ்வும் அவன் தூதருமே பேருபகாரம் செய்தார்கள்" என்றனர். உடனே நபிகளார் கூறினார்கள்: "அன்ஸாரிகளே! நீங்கள் நினைத்தால் இப்படிச் சொல்லலாம்: 'நீங்கள் மக்களால் பொய்ப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டு வந்தீர்கள், நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம்' என்று. நீங்கள் அப்படிச் சொன்னால் அதுவும் உண்மைதான், நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், இஸ்லாத்தில் புதியவர்களின் ஈமானை வலுப்படுத்தவே நான் சில பொருட்களை அவர்களுக்குக் கொடுத்தேன். மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள்? அது உங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லையா? ஹிஜ்ரத் மட்டும் இல்லையென்றால் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்."

இதைக் கேட்ட அன்ஸாரிகள், தங்கள் தாடிகள் நனையும் அளவுக்கு அழுதுகொண்டே, "அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கை நாங்கள் மனதாரப் பொருந்திக் கொண்டோம்" என்றார்கள்.

3. நிரந்தர நரக நெருப்பிலிருந்து காத்தவர்கள்!

நாம் பாவங்களைச் செய்து நரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நபிகளார் நம்மை அதிலிருந்து இழுத்துக் காப்பாற்றுகிறார்கள்.

مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا، فَجَعَلَ الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا، وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تَفَلَّتُونَ مِنْ يَدِي "

எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணமாகிறது, நெருப்பை மூட்டிய ஒரு மனிதனுக்கு உதாரணமாகும். அதில் விட்டில் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும் பறந்து வந்து வீழ்ந்தது. அவன் அவைகளை விரட்டிய போதும், அதில் விழுந்த வண்ணமும் இருந்தன. நானும் அப்படித்தான் உங்களை நரகில் வீழ்வதிலிருந்து தடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். நீங்களோ என்னை மிகைத்து விட்டு அதில் விழுந்து கொண்டிருக்கின்றீர்கள்." (நூல்: முஸ்லிம்).

4. அல்லாஹ்வின் பாதையைக் காண்பித்தவர்கள்!

மக்காவில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்பட்ட போது, ஹபஷா (எத்தியோப்பியா) நாட்டிற்கு நபிகளார் அவர்களை அனுப்பி வைத்தார்கள். குறைஷிகள் அங்கும் சென்று நஜ்ஜாஷி மன்னனிடம் முஸ்லிம்களைக் காட்டிக் கொடுத்தபோது, ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

மன்னரிடம் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது: "அரசே! நாங்கள் மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தோம்; கற்சிலைகளை இறைவனாக வழிபட்டு, செத்த பிராணிகளை உண்டு, மானக்கேடான காரியங்களைச் செய்து, அண்டை வீட்டாருக்குத் துன்பம் விளைவித்தோம். அப்படியிருந்த காலத்தில்தான், எங்களில் ஒருவரையே அல்லாஹ் தூதராக அனுப்பினான். அவரின் ஒழுக்கத்தையும் உண்மையையும் நாங்கள் அறிவோம். அவர் எங்களுக்கு அல்லாஹ்வின் பாதையைக் காட்டினார். அல்லாஹ் ஒருவனையே வணங்கச் சொன்னார். பொய், மானக்கேடு, அனாதையின் சொத்தை அபகரிப்பது ஆகியவற்றைத் தடுத்தார். அதனால் எங்கள் மக்கள் எங்களைத் துன்புறுத்தினார்கள்."

5 & 6. ஈமானின் பூரணத்துவமும், சுவையும் பெற்றுத் தந்தவர்கள்!

நபிகளாரை நேசிக்காமல் ஒருவனின் ஈமான் முழுமையடையாது. 

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

"உங்களில் எவருடைய ஈமானும் பூரணத்துவம் அடையாது; நான் ஒருவருடைய பிள்ளையை விடவும், அவரின் தாய், தந்தையரை விடவும், உலக மக்கள் அனைவரையும் விடவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை!" (புகாரி, முஸ்லிம்).

அதேபோல, ஈமானின் இன்பத்தைச் சுவைக்க வேண்டுமென்றால் நபிகளாரை மனதார வழிகாட்டியாக ஏற்க வேண்டும்:

  ذَاقَ طَعْمَ الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا 

"எவர் அல்லாஹ்வை ரப்பாவாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ஏற்றுத் திருப்தி அடைகின்றாரோ அவரே ஈமானின் சுவையைச் சுவைத்தவராகிறார்." (நூல்: முஸ்லிம்).

7, 8 & 9. உலக மக்களின் அருட்கொடை & உம்மத்தின் மீதான அளவற்ற பாசம்!

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

  وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ 

"நபியே! நாம் உம்மை அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்." (அல்குர்ஆன்: 21:107).

நம் உம்மத்தின் மீது அவர்கள் எப்பேர்ப்பட்ட பாசம் வைத்திருந்தார்கள் தெரியுமா? அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் ஸஹீஹ் முஸ்லிமிலே (ஹதீஸ் எண்: 468) பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட்டு அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனை வருகிறது:

  رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي ۖ وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ 

"என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் ஏராளமான மக்களை வழிகேட்டில் ஆழ்த்திவிட்டன. எனவே, எவர்கள் என்னைப் பின்பற்றினார்களோ, அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள். எவர்கள் எனக்கு மாறு செய்தார்களோ, (அவர்களின் விஷயத்தில்) திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்போனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன்: 14:36).

இதை ஓதிய நபிகளார், அடுத்து ஈஸா (அலை) அவர்கள் நாளை மறுமையில் தன் சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ்விடம் முறையிடும் வசனத்தை ஓதுகிறார்கள்:

  إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ ۖ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ 

"நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும், நிச்சயமாக நீயே யாவற்றையும் மிகைத்தோனுமாகவும், நுண்ணறிவுடையோனுமாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன்: 5:118).

இந்த இரண்டு வசனங்களையும் ஓதிய நபிகளாரின் நெஞ்சம் பதைபதைத்தது. 'இப்ராஹீம் நபியும், ஈஸா நபியும் தத்தம் சமுதாயத்தின் பாவங்களை எண்ணி இவ்வளவு கவலைப்படுகிறார்களே, என் உம்மத்தின் நிலை நாளை மறுமையில் என்னாகுமோ?' என்று எண்ணிய அண்ணலார், தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي "யா அல்லாஹ்! என் உம்மத்து... என் உம்மத்து..." என்று சிறுபிள்ளையைப் போலத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள்.

அகிலத்தின் அருட்கொடை அழுவதைப் பார்த்த அல்லாஹ், ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று அவர் எதற்காக அழுகிறார் என்று கேளுங்கள்" என்றான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கேட்டதற்கு, மாநபி (ஸல்) அவர்கள் தன் உம்மத்தின் மீதான கவலையைத் தெரிவித்தார்கள்.

அதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சொன்னபோது, அல்லாஹ் சொன்னான்:

  يَا جِبْرِيلُ، اذْهَبْ إِلَى مُحَمَّدٍ، فَقُلْ: إِنَّا سَنُرْضِيكَ فِي أُمَّتِكَ، وَلَا نَسُوءُكَ 

"ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று சொல்லுங்கள்: உமது உம்மத்தின் விஷயத்தில் நாம் உம்மைப் பொருந்திக்கொள்ளச் செய்வோம் (உமக்குச் சந்தோஷத்தைத் தருவோம்); நாம் உம்மைக் கவலைப்பட விடமாட்டோம்!"

எப்பேர்ப்பட்ட கருணை பாருங்கள்! உலக மக்கள் அனைவருக்காகவும் அழக்கூடிய ஒரு தலைவர் உண்டென்றால் அது நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே. அதனால்தான் ஒவ்வொரு நபிக்கும் கேட்கப்படும் விசேஷ துஆவை, அவர்கள் தனக்காகக் கேட்காமல்,

  وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ 

"நான் என்னுடைய துஆவை, நாளை மறுமை நாளில் என் உம்மத்திற்குப் பரிந்துரை (ஷஃபாஅத்) செய்வதற்காகப் பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்" என்றார்கள்.

10 & 11. நம்மை காணத் துடித்த நல் உள்ளம் & மாபெரும் பேருபகாரம்!

நபிகளார் நம்மைப் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஒருமுறை, "நான் என் சகோதரர்களைக் காண ஆவலாக இருக்கின்றேன்" என்றார்கள். சஹாபாக்கள், "நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, நீங்கள் என் தோழர்கள். என் சகோதரர்கள் எனக்குப் பின்னால் வந்து, என்னைப் பார்க்காமலேயே என் மீது நேசம் வைக்கும் என் உம்மத்தினர்" என்றார்கள். அப்படிப்பட்ட தூதரை அல்லாஹ் நமக்குத் தந்தது மாபெரும் பேருபகாரமாகும்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ 

"திண்ணமாக, அல்லாஹ் முஃமின்களுக்குப் பெரும் உபகாரம் செய்துள்ளான்; அவனது வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பினான்." (அல்குர்ஆன்: 3:164).

பகுதி 2: சஹாபாக்களின் வரைமுறையற்ற நேசம்!

இந்த காரணங்களுக்காகத்தான் சஹாபாக்கள் நபிகளாரை உயிரினும் மேலாக நேசித்தார்கள். அந்த நேசத்திற்கு 3 நெஞ்சை உருக்கும் சம்பவங்களைப் பார்ப்போம்:

1. ஸவ்பான் (ரலி) அவர்களின் கண்ணீர்: நபிகளாரின் பணியாளரான ஸவ்பான் (ரலி) ஒருநாள் முகம் வாடி, மஞ்சளித்துப் போய் வந்தார்கள். நபிகளார் காரணம் கேட்டபோது, "யா ரசூலல்லாஹ்!  எந்த நோயும் இல்லை, ஆனால் உங்களைக் காணாதபோது என் உள்ளம் துடிக்கிறது. உங்களைப் பார்த்தால்தான் எனக்கு உயிர் வருகிறது. நாளை மறுமையில் நீங்கள் உயர்ந்த சுவனத்தில் இருப்பீர்கள். நான் எங்கே இருப்பேன் என்று தெரியாது. உங்களைப் பார்க்க முடியாமல் என்னால் எப்படி சுவனத்தில் வாழ முடியும்?" என்று அழுதார்கள். அந்த நேசத்தைப் பார்த்துதான் அல்லாஹ் இறக்கினான்:

  وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ... 

"எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள்... ஆகியோருடன் இருப்பார்கள்." (அல்குர்ஆன்: 4:69).

2. அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் மரணத் தருவாய்: அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் மரணத் தருவாயில் சுவர்ப்பக்கம் திரும்பித் தேம்பித் தேம்பி அழுதார்கள். மகன் அப்துல்லாஹ் ஆறுதல் கூறியபோது, அவர்கள் தன் வாழ்வின் 3 காலங்களை விளக்கினார்கள்: "என் முதல் காலத்தில் நபிகளாரை விட எனக்கு வெறுப்பானவர்கள் யாரும் இல்லை. அவர்களைக் கொலை செய்ய நினைத்தேன். அந்த நிலையில் இறந்திருந்தால் நான் நரகவாசி. ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின் வந்த இரண்டாவது காலத்தில், நபிகளாரை விட நேசத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவர் என் பார்வையில் யாருமே இல்லை.

وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ 

அன்னாரின் மீது நான் கொண்டிருந்த அளப்பரிய மரியாதையின் காரணமாக, அவர்களை நான் நிமிர்ந்து முழுமையாகப் பார்த்ததே இல்லை! யாராவது அவர்களை வர்ணிக்கச் சொன்னால் என்னால் முடியாது, ஏனென்றால் நான் அவர்களைப் பார்த்தது குறைவு! இப்போது எனது மூன்றாவது காலம்... என் மண்ணறையில் அடக்கம் செய்தபின், ஒரு ஒட்டகத்தை அறுத்துப் பங்கிடும் நேரமளவுக்கு என் கப்ருகருகில் நில்லுங்கள், உங்களைக் கொண்டு நான் முன்நிற்கும் மலக்குகளுக்குப் பதிலளிக்கும் தைரியத்தைப் பெறுவேன்" என்று அழுதுகொண்டே கூறினார்கள். எப்பேர்ப்பட்ட கண்ணியம் பாருங்கள்!

3. அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களின் நெஞ்சை உலுக்கும் கேள்வி: நபிகளார் வபாத்தாகி, அவர்களைப் பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்தோடு நல்லடக்கம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் சஹாபாக்கள். அப்போது அண்ணலாரின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைப் பார்த்துக் கண்ணீரோடு ஒரு கேள்வி கேட்டார்கள்:

يَا أَنَسُ، أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التُّرَابَ؟ 

“அனஸே! நபி (ஸல்) அவர்களின் புனித உடலை அடக்கம் செய்து, அவர்களின் மீது அந்தப் பாலைவனத்து மண்ணை அள்ளிப் போடுவதற்கு உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனம் வந்ததோ? அந்த மண்ணை அள்ளிப்போட்டது உங்கள் மனதிற்குத் திருப்தியாக இருந்ததா?” (நூல்: புகாரி). இதைக் கேட்ட சஹாபாக்கள் கதறித் துடித்தார்கள்!

முடிவுரை!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நாம் மாநபி (ஸல்) அவர்களை நமது உயிரை விட, நமது குடும்பத்தை விட, நமது செல்வங்களை விட மேலாக நேசித்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் அல்லாஹ் திருமறையில் மிகக் கடுமையான ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்:

قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ 

"(நபியே!) நீர் கூறுவீராக: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவியரும், உங்களுடைய குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நஷ்டமடைந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய வியாபாரமும், நீங்கள் விரும்பக்கூடிய வீடுகளும் — அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விட உங்களுக்கு மிகவும் பிரியமானதாக இருக்குமானால், அல்லாஹ் தன்னுடைய கட்டளையை (வேதனையை) கொண்டு வரும் வரை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!" (சூரா அத்-தவ்பா: 24).

அல்லாஹ்வின் இந்த வேதனைக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது என்றால், நம்முடைய உள்ளங்களில் மட்டுமல்லாமல், நமது அடுத்த தலைமுறையான குழந்தைகளின் நெஞ்சங்களிலும் அந்த நேசத்தை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். அதனால்தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

أَدِّبُوا أَوْلَادَكُمْ عَلَى ثَلَاثِ خِصَالٍ: حُبِّ نَبِيِّكُمْ، وَحُبِّ أَهْلِ بَيْتِهِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ 

"உங்கள் குழந்தைகளுக்கு மூன்று நற்பண்புகளைக் கட்டாயமாகக் கற்றுக் கொடுத்து வளருங்கள். 1. உங்கள் நபியின் மீதான நேசம். 2. நபியின் குடும்பத்தார் (அஹ்லுல்பைத்) மீதான நேசம். 3. திருக்குர்ஆனை ஓதுவது." (நூல்: தப்ரானீ, தய்லமீ).

ஆகவே, அந்த அண்ணலார் நமக்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்கள். நாளை மறுமையில் நமக்காகக் காத்து நிற்பவர்கள். அவர்களை நமது "உயிருக்கு உயிராக நேசிப்போம்". நமது "உயிரினும் மேலாக நேசிப்போம்". அவர்களின் சுன்னத்துகளைப் பின்பற்றி, உலமாக்களைக் கண்ணியப்படுத்தி எல்லைகளைக் கடந்து நேசிப்போம்.

யா அல்லாஹ்! உன்னிடத்தில் உன்னை நேசிக்கும், உன் ஹபீப் (ஸல்) அவர்களை நேசிக்கும் நல்லோர்களின் கூட்டத்தில் எங்கள் அனைவரையும் ஆக்கியருள்வாயாக! நம்முடைய சந்ததிகளின் உள்ளங்களில் நபி நேசத்தை ஆழமாகப் பதிய வைப்பாயாக! நாளை மறுமையில் நபிகளாரின் திருக்கரங்களால் ஹவ்ளுல் கவ்ஸர் நீரைப் பருகும் பாக்கியத்தை வழங்குவாயாக! ஆமீன்!

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.


தொகுப்பு: 

மெளலவி ஹாபிழ் M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி அவர்கள், 

இமாம், மேலப் பள்ளிவாசல், இராஜபாளையம். 

Rajai Aalim Media

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...