ஹஜ்ஜத்துல் விதாஃ - மாநபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையும் சமூக வாழ்வியல் நெறிகளும்!
نَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ... أَمَّا بَعْدُ:
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
மனிதகுல வரலாற்றிலேயே ஒப்புவமை இல்லாத ஒரு மாபெரும் மனித உரிமைப் பிரகடனம் உண்டென்றால், அது அண்ணல் நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள் நிகழ்த்திய 'ஹஜ்ஜத்துல் விதாஃ' எனும் இறுதி ஹஜ்ஜின் பேருரையாகும்.
ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் 9-ஆம் நாள் அரஃபா பெருவெளியில், சுட்டெரிக்கும் வெயிலில் 'கஸ்வா' என்ற ஒட்டகத்தின் மீது அமர்ந்து, ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரத்திற்கும் அதிகமான சஹாபாக்களுக்கு மத்தியில் மாநபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். நபிகளார் ஆற்றிய அந்த உன்னதப் பேருரையின் ஒவ்வொரு பகுதியையும், சமகால சவால்களோடும் திருமறை வசனங்களோடும் இணைத்து விரிவாகச் சிந்திப்போம்.
1. மனித உயிர், உடைமை மற்றும் மானத்தின் புனிதத்துவம்
அரஃபா மைதானத்தில் நின்ற பெருந்திரளான மக்களை நோக்கி அண்ணலார் வினவினார்கள்: "மக்களே! இது எந்த மாதம்? இது எந்த நகரம்? இது எந்த நாள்?" சஹாபாக்கள் நடுநடுங்கி, "புனிதமான துல்ஹஜ் மாதம்; புனிதமான மக்கா நகரம்; புனிதமான அரஃபா நாள்" என்றனர்.
அப்போது நபிகளார் பிரகடனம் செய்தார்கள்:
فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا
(நிச்சயமாக உங்களது இரத்தங்களும், உங்களது செல்வங்களும், உங்களது மான மரியாதைகளும் உங்களுக்கு மத்தியில் புனிதமானவையாகும்; இந்த நாளில், இந்த மாதத்தில், இந்த நகரம் எவ்வளவு புனிதமானதோ அதுபோல! — புகாரி: 1741, முஸ்லிம்: 1679).
கஅபாவை விட ஒரு முஃமினின் கண்ணியம் உயர்ந்தது: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்; நபிகளார் கஅபாவை நோக்கி நின்று கூறினார்கள்: "கஅபாவே! நீ எவ்வளவு மகத்துவமானது! உன்னுடைய வாசனை எவ்வளவு அழகானது! ஆனால், அல்லாஹ்வின் பார்வையில் ஒரு முஃமினுடைய கண்ணியமும், அவனது உயிரும், உடமையும் உன்னை விடப் பன்மடங்கு புனிதமானதாகும்!" (இப்னு மாஜா: 3932).
இன்றைய நடைமுறை நிலைமை: இன்று சமூகம் இந்த எச்சரிக்கையை அறவே மறந்துவிட்டது.
சமூக வலைத்தளங்களில் (Facebook, WhatsApp) ஒருவரது தனிப்பட்ட வாழ்வைச் சீரழிப்பது, ஆபாசமாகச் சித்தரிப்பது, அவதூறுகளை அள்ளி வீசுவது மிகச் சாதாரணமாக நடக்கிறது. அடுத்தவரின் மானத்தைக் கெடுப்பது கஅபாவை இடிப்பதற்குச் சமமான குற்றம் என்பதை நாம் உணர வேண்டும்.
வியாபாரத்தில் ஏமாற்றி அடுத்தவர் பணத்தைப் பறிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. பிறரின் பொருளை அநியாயமாக அபகரிப்பவன் மறுமையில் நரக நெருப்பையே தன் வயிற்றில் நிரப்புகிறான்.
2. அறியாமைக் கால அக்கிரமங்களும் வட்டிக் கொடுமையும் ஒழிப்பு
அறியாமைக் காலத்துப் பழிக்குப் பழி வாங்கும் கொலை வெறிகளையும், வன்முறைகளையும் முழுமையாக ஒழித்த அண்ணலார், அடுத்துக் கையில் எடுத்தது சமுதாயத்தை அரிக்கின்ற 'வட்டி' என்ற புற்றுநோயைத்தான்.
நபிகளார் பிரகடனம் செய்தார்கள்:
وَرِبَا الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَانَا رِبَا عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ
(அறியாமைக் காலத்து வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. முதலாவதாக என் பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிபின் வட்டியிலிருந்தே அதை நான் தொடங்குகிறேன்; அது முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது! — முஸ்லிம்: 1218).
வட்டி வாங்குபவருக்கும் கொடுப்பவருக்கும் எதிராக அல்லாஹ் தொடுக்கும் நேரடிப் போரை திருமறை வசனங்கள் எச்சரிக்கின்றன:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ
(ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால், எஞ்சியுள்ள வட்டியை விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் எழும் போர்ப் பிரகடனத்தை அறிந்துகொள்ளுங்கள்! — சூரா அல்-பகரா: 278-279).
வட்டியினால் விளையும் பேரழிவு: நபிகளார் கூறினார்கள்: "அழிவை உண்டாக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்" அதில் ஒன்றாக வட்டியைச் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி: 2766). மேலும், வட்டி வாங்குபவன், கொடுப்பவன், அதை எழுதி வைப்பவன், அதற்குச் சாட்சியாக இருப்பவன் ஆகிய நால்வரையும் நபிகளார் சபித்துள்ளார்கள். (முஸ்லிம்: 1598).
இன்றைய சமுதாயத்தின் அவலநிலை: இன்று கந்துவட்டி, மீட்டர் வட்டி, மைக்ரோ பைனான்ஸ் கடன் வலைகள், ஆன்லைன் உடனடிக் கடன் ஆப்கள் (Loan Apps) மூலமாக எத்தனையோ குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. மானம் இழந்து வீட்டை விட்டு ஊரை விட்டு ஓடுகிறார்கள். வட்டி என்பது செல்வத்தைப் பெருக்காது; மாறாக பரக்கத்தை வேரோடு அழித்து நரகப் படுகுழியில் தள்ளிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. பெண் குலத்தின் கண்ணியமும் சமநிலையான இஸ்லாமியச் சட்டமும்
அரஃபா பெருவெளியில் நபிகளார் பெண்களின் உரிமைகளுக்காக ஆணித்தரமாக முழங்கினார்கள்:
فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ
(பெண்களின் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அமானிதமாகவே ஏற்றுக்கொண்டீர்கள்; அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அவர்களை உங்களுக்கு ஆகுமாக்கிக் கொண்டீர்கள்! — முஸ்லிம்: 1218).
கேரளச் சர்ச்சையும் இஸ்லாமிய நடுநிலை அணுகுமுறையும்: அண்மைக்காலமாக, பாரம்பரிய ஆலிம்கள் பேசிய கருத்துக்களைத் திரித்து, "இஸ்லாம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து அடிமைகளாக்குகிறது" என்று இஸ்லாத்தின் மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன.
இஸ்லாமிய ஷரீஆ முன்வைக்கும் தெளிவான வழிகாட்டல்:
ஹிஜாப் என்பது பாதுகாப்புக் கவசம், சிறை அல்ல: அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
(நபியே! உமது மனைவியருக்கும், உமது பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் மேல் அங்கிகளைத் தம்மீது போர்த்திக் கொள்ளட்டும்; அவர்கள் அறியப்பட்டு துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு இதுவே மிக உகந்தது! — சூரா அல்-அஹ்ஸாப்: 59).
வரம்புகளோடு கூடிய கல்வி & சமூகப் பங்களிப்பு: ஒரு பெண் தனது கண்ணியமான ஹிஜாபைப் பேணி, அந்நிய ஆண்களோடு தேவையற்ற கலப்பு இல்லாமல் மார்க்கக் கல்வியையும், மருத்துவ மற்றும் ஆசிரியப் பணிகளையும் கற்றுக்கொள்வதற்கு மார்க்கத்தில் முழுமையான அனுமதி உண்டு.
சஹாபிய்யா பெண்களின் பங்களிப்பு: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மாபெரும் ஃபிக்ஹ் சட்ட மேதையாகவும், ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அறிவித்த பேராசிரியராகவும் திகழ்ந்தார்கள். காயமடைந்த வீரர்களுக்குப் போர்க்களத்தில் அன்னை ருஃபைதா (ரலி) முதலுதவி சிகிச்சை முகாம் அமைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஷிஃபா பின்த் அப்தில்லாஹ் (ரலி) என்ற பெண்மணி சந்தை நிர்வாக மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். எனவே, மேற்கத்திய கலாச்சாரம் போலப் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதையும் இஸ்லாம் எதிர்க்கிறது; அதேநேரம் மார்க்க எல்லைக்குள் அவர்களின் உரிமைகளை மறுத்து நசுக்குவதையும் மார்க்கம் ஏற்பதில்லை.
4. மனித சமத்துவம் மற்றும் நிறவெறி ஒழிப்பு
ஜாதி, குலம், நிறப் பெருமைகளை வேரறுத்த அண்ணலார் பிரகடனம் செய்தார்கள்:
يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْ
(
திருக்குர்ஆன் கூறுகிறது: إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகக் கண்ணியமானவர் உங்களில் அதிக இறையச்சம் உடையவரே! — சூரா அல்-ஹுஜுராத்: 13).
பிலால் (ரலி) அவர்களை உயர்த்திய இஸ்லாம்: அபிசீனியக் கருப்பின அடிமையாகக் கிடந்த பிலால் (ரலி) அவர்களை இஸ்லாம் அரவணைத்தது. மக்கா வெற்றியின் போது, பெரிய பெரிய குறைஷிப் பிரபுக்கள் பார்த்திருக்க, புனித கஅபாவின் கூரை மீது ஏறி பாங்கு சொல்லும் மாபெரும் கௌரவத்தை மாநபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு மட்டுமே வழங்கினார்கள்! உமர் (ரலி) அவர்கள் பிலால் (ரலி) அவர்களைக் காணும்போது "எங்கள் தலைவர் பிலால் அவர்களே வருக" என்று கட்டித்தழுவுவார்கள்.
இன்றும்கூட நமது திருமணப் பேச்சுவார்த்தைகளில் நிறம், ஜாதி, வம்சப் பெருமைகளைப் பார்ப்பது நபிகளாரின் இந்த இறுதிப் பேருரைக்கு நாம் செய்யும் அப்பட்டமான துரோகம்.
5. வழிகேடாமல் இருக்க இரு பெரும் பொக்கிஷங்கள்!
சமுதாயம் எப்போதும் நேர்வழியில் நிற்பதற்கான ஜீவநாடியை அண்ணலார் ஒப்படைத்தார்கள்:
تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنِ اعْتَصَمْتُمْ بِهِ: كِتَابَ اللَّهِ وَسُنَّتِي
(நான் உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன்; அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் வரை ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று என்னுடைய சுன்னத் (நடைமுறை)! — முஅத்தா மாலிக்: 1601, முஸ்தத்ரக் அல்-ஹாகிம்: 318).
அல்லாஹ் கூறுகிறான்:
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
(நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை (திருக்குர்ஆனை) உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்துவிடாதீர்கள்! — சூரா ஆல இம்ரான்: 103).
குர்ஆனையும் சுன்னாவையும் நம்முடைய சுய சிந்தனையின் படி விளக்காமல், அவற்றை அப்படியே வாழ்ந்து காட்டிய ஸஹாபாக்கள், தாபிஈன்கள் மற்றும் பாரம்பரிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் உலமாக்களின் நேர்வழியில் நின்று பின்பற்றுவதே வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாகும்.
6. இறுதிச் சாட்சியமும் உம்மத்தின் பொறுப்பும்
உரையின் இறுதிக் கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி வினவினார்கள்: "மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?"
ஒரு லட்சத்திற்கும் அதிகமான சஹாபாக்களின் பெருங்கூட்டம் விண்ணதிர முழங்கியது: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக நீங்கள் இறைச்செய்தியை முழுமையாக எத்திவைத்துவிட்டீர்கள்; அமானிதத்தை நிறைவேற்றிவிட்டீர்கள்; சமுதாயத்திற்கு நன்மையையே நாடி உபதேசம் செய்தீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்!"
அப்போது நபிகளார் தன் ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பிறகு மக்களை நோக்கிச் சுட்டிக்காட்டி மூன்று முறை முழங்கினார்கள்:
اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ
(யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு! யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு! யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு! — முஸ்லிம்: 1218).
அடுத்து அண்ணலார் பிறப்பித்த கட்டளை:
فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ
(இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு இந்தச் செய்திகளை எத்திவைக்கட்டும்! — புகாரி: 1741).
அன்று அரஃபா மைதானத்தில் நின்ற சஹாபாக்கள் இந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு கிளம்பிய காரணத்தினால்தான், இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாமும் ஈமானைப் பெற்றுள்ளோம்.
7. மார்க்கம் முழுமை பெற்ற வரலாற்றுத் திருநாள்!
இந்த உரை நிறைவுற்ற தருணத்தில் அல்லாஹ் இந்த அருள் வசனத்தை இறக்கினான்:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
(இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் எனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன்; உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்! — சூரா அல்-மாயிதா: 3).
இந்த வசனத்தைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் கதறி அழுதார்கள். "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "ஒரு விஷயம் முழுமையடைந்து விட்டால், அடுத்து அதிலிருந்து பிரியக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்" என்று நபிகளாரின் வபாத் நெருங்கிவிட்டதை உணர்ந்து கண்ணீர் வடித்தார்கள்.
முடிவுரை & துஆ
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
விடைபெறும் ஹஜ்ஜில் மாநபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரை மனிதகுல வாழ்வின் ஆன்மீக மற்றும் சமூகச் சாசனம்.
பிறரின் இரத்தத்தையும், பணத்தையும், மானத்தையும் மதிப்போம்.
வட்டி, அநியாய சம்பாத்தியங்களை அடியோடு விடுப்போம்.
பெண்களுக்குரிய கண்ணியமான உரிமைகளை வழங்கி, அவர்களை மார்க்க ஒழுக்கத்தோடு அரவணைப்போம்.
நிறம், குலப் பாகுபாடுகளை ஒழித்து, இறையச்சமுள்ள சமுதாயமாக மாறுவோம்.
குர்ஆன்-சுன்னாவை உறுதியாகப் பற்றிப் பிடிப்போம்.
யா அல்லாஹ்! எங்கள் உயிர்களையும் மானங்களையும் பாதுகாப்பாயாக!
வட்டி போன்ற கொடிய சாபங்களை விட்டும் எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவாயாக!
எங்கள் குடும்பங்களில் அமைதியையும் ஒழுக்கத்தையும் நிலைநிறுத்துவாயாக!
அரஃபாவில் அண்ணலார் ஆற்றிய அந்த உன்னதப் பேருரையின் வழியில் வாழ்ந்து, மறுமையில் மாநபி (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்களின் திருக்கரங்களால் ஹவ்ளுல் கவ்ஸர் நீரைப் பருகி, உயர் சுவனத்தைப் பெறும் நற்பேற்றினை நம் அனைவருக்கும் தந்தருள் புரிவாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.
தொகுப்பு: மெளலவி ஹாபிழ்
M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி அவர்கள்,
இமாம், மேலப் பள்ளிவாசல், இராஜபாளையம்.
Rajai Aalim Media
No comments:
Post a Comment