Thursday, 13 August 2026

தாய்நாட்டின் சுதந்திரமும், இளைஞர்களைப் போதையிலிருந்து மீட்கும் புதிய சுதந்திரப் போராட்டமும்!

தாய்நாட்டின் சுதந்திரமும், இளைஞர்களைப் போதையிலிருந்து மீட்கும் புதிய சுதந்திரப் போராட்டமும்!



انَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ... أَمَّا بَعْدُ:

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!

நாளை ஆகஸ்ட் 15, நாம் நமது தாய்நாடான இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த சுதந்திரக் காற்றை நாம் இன்று சுதந்திரமாகச் சுவாசிப்பதற்காக நமது முன்னோர்கள் - குறிப்பாக இஸ்லாமிய மன்னர்கள், உலமாக்கள், பெரியவர்கள், இஸ்லாமியப் பெண்கள் மற்றும் இஸ்லாமியச் சிறுவர்கள் என ஒட்டுமொத்தச் சமூகமும் செய்த தியாகங்களும், சிந்திய ரத்தங்களும், செய்த உயிர் தியாகங்களும் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இன்றைய ஜும்ஆ மேடையில், அந்த ஒட்டுமொத்தச் சமூகத்தின் தியாகங்களையும் நினைவுகூர்வதோடு, தற்போதைய காலகட்டத்தில் நம் சமுதாயம் சந்திக்கின்ற சவால்களையும், குறிப்பாக நம்முடைய இளைஞர்களைக் காக்க நாம் முன்னெடுக்க வேண்டிய 'புதிய சுதந்திரப் போராட்டம்' குறித்தும் ஆழமாகச் சிந்திக்க இருக்கிறோம்.

1. சுதந்திரக் காற்றிற்காக இஸ்லாமியர்கள் சிந்திய ரத்தமும், ஒட்டுமொத்த தியாகங்களும்!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது இஸ்லாமியர்களின் தியாகங்களை மறைத்துவிட்டு எழுதப்பட முடியாத ஒன்றாகும். இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம், எவ்விதக் கஷ்டமுமின்றி சும்மா கிடைத்துவிடவில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன்முதலில் போர் முரசு கொட்டியவர்கள் நமது இஸ்லாமிய மன்னர்களும், உலமாக்களும்தான். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும், சிறுவர்களும் கூட இந்த நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போராடினார்கள். அவர்கள் யார் யார்? அவர்கள் செய்த தியாகங்கள் என்ன என்பதை நாம் விரிவாகப் பார்க்க வேண்டும்.

  • ஷா அப்துல் அஸீஸ் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) - (1803-ல் முதல் போர் முரசு): இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வேரூன்றத் தொடங்கியபோது, 1803-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாத் (புனிதப்போர்) செய்வது கடமை என்று வரலாற்றுச் சிறப்புமிக்க மார்க்கத் தீர்ப்பை (ஃபத்வா) வழங்கி, சுதந்திரப் போராட்டத்தின் முதல் தீப்பொறியை உருவாக்கியவர் டெல்லியைச் சேர்ந்த இந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞர்தான்.

  • மாவீரன் திப்பு சுல்தான் (ஷஹீத்): தென்னகத்தின் சிங்கம் மாவீரன் திப்பு சுல்தான். உலகிலேயே முதன்முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'ராக்கெட்' (Rocket) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போர் செய்தவர். ஆங்கிலேயர்கள் அவரிடம் சமரசம் பேச வந்தபோது, "நரியாக நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கமாக ஒரு நாள் வாழ்ந்து மடிவதே மேல்" என்று முழங்கி, 1799-ல் போர்க்களத்தில் வாளேந்திப் போராடி வீரமரணம் அடைந்தார். ஆங்கிலேயத் தளபதி இவருடைய உடலைப் பார்த்துச் சொன்னான், "இன்று முதல் இந்தியா எங்களுடையது" என்று. அந்த அளவிற்கு அவர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

  • மௌலானா ஃபழ்லுல் ஹக் கைராபாதி (ரஹ்) - (1857 ஜிஹாத்): 1857-ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரில் (சிப்பாய்க் கலகம்), ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் செய்வது ஒவ்வொரு இந்திய முஸ்லிமின் மீதும் 'ஃபர்ளு ஐன்' (கட்டாயக் கடமை) என்று டெல்லி ஜும்ஆ மசூதியில் ஃபத்வாவை வெளியிட்டார். இதற்காக அவர் அந்தமான் சிறையில் (காலாபானி) அடைக்கப்பட்டு, பல சித்திரவதைகளை அனுபவித்து அங்கேயே உயிர்துறந்தார்.

  • மௌலானா மஹ்மூது ஹசன் தேவ்பந்தி (ரஹ்) - (பட்டுத் துணிப் போராட்டம்): ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட, உலக முஸ்லிம் நாடுகளின் உதவியைக் கோரி பட்டுத் துணியில் ரகசிய கடிதங்களை எழுதி அனுப்பினார் (Reshmi Rumal Tehreek). இதற்காக அவர் மால்டா (Malta) தீவுச் சிறையில் அடைக்கப்பட்டுப் பனிக்கட்டிகளின் மீது படுக்கவைக்கப்பட்டுத் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தபோது, அவருடைய முதுகில் தோல்களே இல்லை, அந்த அளவிற்குச் சித்திரவதை செய்யப்பட்டார்.

  • அஷ்பாக்குல்லாஹ் கான்: சுதந்திரப் போராட்டக் களத்தில் தூக்கு மேடையை முத்தமிட்ட இளம் போராளி. அவர் தூக்கு மேடைக்குச் செல்லும்போது, "என் தாய்நாட்டின் மண்ணைக் கொஞ்சம் கொடுங்கள், அதை என் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டுத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டபடி உயிர்நீத்தார்.

  • இஸ்லாமியப் பெண்கள்: பேகம் ஹஸ்ரத் மஹ்ல், பி அம்மா (அபாடி பானோ பேகம்) போன்ற வீரமங்கைகள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் படைகளை வழிநடத்தினார்கள், சிறை சென்றார்கள், தங்கள் நகைகளை விற்றுப் போராட்டத்திற்கு நிதி வழங்கினார்கள். "என் மகன்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகச் சம்மதித்தால், நானே என் கைகளால் அவர்களின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன்" என்று முழங்கிய வீரத்தாய் பி அம்மா அவர்கள்.

  • இஸ்லாமியச் சிறுவர்கள்: 12 வயதுச் சிறுவன் நீதிமன்றத்தில் "என் பெயர் ஆஸாத் (விடுதலை), என் தந்தை பெயர் இஸ்லாம், என் முகவரி சிறைச்சாலை" என்று ஆங்கிலேய நீதிபதியின் கண்களைப் பார்த்து முழங்கினான். எத்தனை முறை சாட்டையால் அடித்தபோதும்   "ஆஸாத்" என்று முழங்கிய அந்தச் சிறுவனின் துணிச்சல் எங்கே?

ஆயிரக்கணக்கான உலமாக்கள் டெல்லியின் வீதிகளிலுள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டார்கள், உயிரையும், உடைமையையும், ரத்தத்தையும் கொடுத்து, மன்னர்கள், உலமாக்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகமும் இந்த இந்தியத் திருநாட்டின் சுதந்திரக் காற்றை நமக்குச் சுவாசிக்கக் கொடுத்தது என்பதை நாம் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வேண்டும்.

2. தற்போதைய காலகட்டமும், திட்டமிட்ட சதிகளும், அல்லாஹ் காட்டும் வழியும்!

ஆனால், அன்பானவர்களே! தற்போதைய காலச்சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எந்த முஸ்லிம்கள் இந்த நாட்டைத் தங்கள் ரத்தத்தால் கட்டியெழுப்பினார்களோ, அந்த முஸ்லிம்களுக்கே இங்கு வசிப்பதற்கு இடமில்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இது தற்செயலாக நடப்பதல்ல; இது திட்டமிடப்பட்ட சதி!

  • சமூக முடக்கம்: முத்தலாக் போன்ற விவகாரங்களை அரசியலாக்கி, இஸ்லாமியக் குடும்பக் கட்டமைப்பைச் சிதைக்க சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இது இஸ்லாமிய ஷரீஅத்தில் தலையிடும் சதித் திட்டமாகும்.

  • உயிர் அச்சுறுத்தல்: வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம், மாட்டுக்கறி வைத்திருந்தார், கரி வச்சிருந்தார் என்ற பொய்யான காரணங்களைக் கூறி, அப்பாவி இஸ்லாமியர்கள் நடுரோட்டில் வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்படும் (Mob Lynching) கொடூரங்கள் அரங்கேறுகின்றன. இது நம்மை அச்சுறுத்தி ஒடுக்கும் சதியல்லவா?

  • குடியுரிமை அச்சுறுத்தல்: நமது குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கி (NRC, CAA), நம்மை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்த வேண்டும் என்ற நோக்கிலும் திட்டமிட்டுப் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன.

அல்லாஹ்வின் மார்க்கத்தை ஒருபோதும் அழிக்க முடியாது: கண்ணியத்திற்குரியவர்களே! அவர்கள் என்னதான் சதித் திட்டங்கள் தீட்டினாலும், எவ்வளவுதான் இஸ்லாமியர்களை முடக்க நினைத்தாலும், எத்தனை இஸ்லாமியர்களை நீங்கள் அழித்தாலும் சரி, அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை பாதுகாத்தே ஆகுவான்! அல்லாஹ் திருமறையில் மிகத் தெளிவாகக் கூறுகிறான்:

يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

"அவர்கள் தங்கள் வாய்களால் (ஊதி) அல்லாஹ்வின் ஒளியை அணைத்துவிட விரும்புகிறார்கள். ஆனால், நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைச் சம்பூர்ணமாக்கியே (முழுமையாக்கியே) தீருவான்." (சூரா அத்-தவ்பா: 32)

எனவே, அவர்கள் சட்டங்கள் மூலம் நம்மை அச்சுறுத்தலாம், வன்முறை மூலம் நம்மை ஒடுக்கலாம், ஆனால் நமது ஈமானையோ அல்லது அல்லாஹ் இந்த பூமிக்கு வழங்கிய இஸ்லாமிய ஒளியையோ அவர்களால் ஒருபோதும் அணைக்க முடியாது!

3. தாய்நாட்டை நேசிப்பது ஈமானியக் கடமை! - "நாங்கள் இங்கேயே இருப்போம்"

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது. இந்த நாடு எவரோ ஒருவருக்கு மட்டும் சொந்தமானதல்ல; இது நம் அனைவரின் தாய்நாடு! தாய்நாட்டை நேசிப்பது என்பது இஸ்லாம் நமக்குக் கற்றுத்தந்த மிக முக்கியமான மார்க்கக் கடமையாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்கள், தம்மை விரட்டியடித்த சொந்த ஊரான மக்காவை விட்டு வெளியேறும்போது, எல்லையில் நின்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்:

مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ 

"எவ்வளவு தூய்மையான நகரம் நீ! எனக்கு மிகவும் விருப்பமான நாடும் நீயே! என் சமூகத்தார் என்னை உன்னை விட்டு வெளியேற்றியிருக்காவிட்டால், உன்னைத் தவிர வேறெங்கும் நான் வசித்திருக்க மாட்டேன்." (திர்மிதி).

இந்தியாவே எங்கள் தாய்நாடு: இன்று வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்பவர்கள் நம்மைக் பார்த்து "இந்தியாவை விட்டுப் போயிருங்க, பாகிஸ்தானுக்குப் போயிருங்க" என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் என்ன தெரியுமா? 1947-ல் பாகிஸ்தான் உருவானபோது, எங்களுடைய முன்னோர்கள் நினைத்திருந்தால் அங்கே போயிருக்க முடியும். ஆனால், அவர்கள் இந்த இந்திய மண்ணை, இந்தத் தாய்நாட்டைத் தேர்ந்தெடுத்தார்கள். இது எங்களுடைய முன்னோர்கள் ரத்தம் சிந்திய மண்! இது எங்களுடைய மண்! நாங்கள் இந்த நாட்டுல தான் இருப்போம்! இந்த மண்ணில்தான் சுஜூது செய்வோம்! இந்த மண்ணில்தான் அடக்கப்படுவோம்! நம்மை இந்த நாட்டை விட்டுத் துரத்த எவருக்கும் உரிமையில்லை!

4. அரசியலிலும் சமூகத்திலும் சாதிக்க 'ஒற்றுமை' ஒன்றே தீர்வு!

இன்று நம் மீது ஏவப்படும் அனைத்து அநீதிகளையும், சதிகளையும் நாம் எப்படி எதிர்கொள்வது? அதற்கு இஸ்லாம் காட்டும் ஒரே தீர்வு: ஒற்றுமை!

சுதந்திரப் போராட்ட காலத்தில் நமது முன்னோர்கள் - மன்னர்கள், உலமாக்கள், பெண்கள், சிறார்கள் என அனைவரும் - எப்படி வேற்றுமைகளை மறந்து, ஒட்டுமொத்தமாக ஓரணியில் நின்று போராடி ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து வெற்றி வாகை சூடினார்களோ, அதேபோன்று இன்று நாமும் நமக்குள் இருக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாமியர்களாக ஒன்றுபட வேண்டும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا 

"நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை (மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் பிடித்துக் கொள்ளுங்கள்; மேலும், (உங்களுக்குள்) பிரிந்து விடாதீர்கள்." (சூரா ஆல இம்ரான்: 103).

நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَசَلَّمَ) அவர்கள் கூறினார்கள்:

الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا 

"ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு ஒரு வலுவான கட்டடத்தைப் போன்றவன் ஆவான். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது என்று கூறிவிட்டு, தமது ஒரு கையின் விரல்களை மறுகையின் விரல்களுக்குள் கோர்த்துக் காட்டினார்கள்." (புகாரி).

நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, இந்த நாட்டின் அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் நம்மால் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும். நமது உரிமைகளை நாம் தட்டிப் பறிக்க முடியும். நாம் பிரிந்து கிடந்தால் அவர்கள் நம்மை எளிதாக அழித்துவிடுவார்கள்.

5. ஒரு புதிய சுதந்திரப் போராட்டம்: போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்!

கண்ணியத்திற்குரியவர்களே! நாம் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். ஆனால், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டிய நமது இளைஞர்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது என்பதை நாம் மிக விரிவாகச் சிந்திக்க வேண்டும்.

ஆங்கிலேயர்களிடமிருந்து அவர்கள் தப்பித்துவிட்டார்கள்; ஆனால், 'போதை' (Drugs) என்ற கொடிய அரக்கனிடம் இன்று அவர்கள் அடிமையாகச் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். கஞ்சாவுக்கும், மதுவுக்கும், போதை ஊசிகளுக்கும், நவீன மருந்துப் பொருட்களுக்கும் அடிமையாகி, தங்களின் இளமையையும், எதிர்காலத்தையும், ஈமானையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நவீன அடிமைத்தனம்! நமது முன்னோர்கள் எப்படி அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்கப் போராடினார்களோ, இன்று நாமும் ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் நமது இஸ்லாமிய இளைஞர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதுதான் இன்று நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய சுதந்திரப் போராட்டமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

ولا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ 

"உங்களின் கரங்களால் உங்களை நீங்களே அழிவின் பக்கம் தள்ளிவிடாதீர்கள்." (சூரா அல்-பகரா: 195).

நபிகள் நாயகம் (صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ) அவர்கள் கூறினார்கள்: 

كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ 

"போதையேற்படுத்தும் அனைத்தும் மதுவாகும்; போதையேற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்." (முஸ்லிம்).

போதைக்கு அடிமையான ஒருவனால், அல்லாஹ்வையும் தொழ முடியாது, தன் தாய் தந்தையரையும் மதிக்க முடியாது, இந்த நாட்டிற்கும் எந்த நன்மையும் செய்ய முடியாது. அவன் உயிருள்ள ஒரு பிணமாகவே நடமாடிக் கொண்டிறான். இந்த நிலை மாற வேண்டும்.

6. மஹல்லாக்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் மாபெரும் கட்டமைப்பு!

இந்த இளைஞர்களை எப்படி மீட்பது? இது தனி மனிதனால் சாத்தியமில்லை. ஒவ்வொரு பள்ளிவாசல் ஜமாஅத்தும், ஒவ்வொரு மஹல்லாவும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இது நம் அனைவரின் மீதும் கடமையான ஒரு 'ஜிஹாத்' ஆகும்.

  • கட்டமைப்பு உருவாக்குதல்: ஒரு மஹல்லா, தனது பக்கத்து மஹல்லாவோடு கைகோர்த்து ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பை (Network) உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் விழிப்புணர்வு குழுக்களை அமைக்க வேண்டும்.

  • அன்பால் அரவணைத்தல்: ஊருக்குள் எந்த இளைஞர்கள் போதையில் விழுந்திருக்கிறார்கள், தவறான பாதையில் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்களை ஒதுக்கி வைக்காமல், அன்பால் அரவணைத்து கவுன்சிலிங் (Counseling) கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மாற்றுப் பாதையை, மார்க்கத்தின் அழகைக் காட்ட வேண்டும்.

  • சுதந்திரம் பெற்றுத் தருதல்: அவர்களுக்கு மார்க்கப் பற்றையும், தாய்நாட்டின் மீதான பற்றையும் ஊட்டி, அவர்களை அந்தப் போதை அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு உண்மையான 'சுதந்திரத்தை' நாம் பெற்றுத் தர வேண்டும். அவர்களை இந்த நாட்டின் தூண்களாக மாற்ற வேண்டும்.

முடிவுரை!

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்தச் சுதந்திர தின நன்னாளில், நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த தியாகங்களையும் - குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறார்களின் வீரமிக்க பங்களிப்புகளையும் - நினைவுகூர்ந்து, நமது தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், நமது தாய்நாட்டின் நலனுக்காகவும், போதைக்கு அடிமையான நமது இளைஞர்களை மீட்பதற்காகவும், நம் மீது ஏவப்படும் சதித் திட்டங்களை ஒற்றுமையால் முறியடிப்பதற்காகவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்று உறுதி ஏற்போம்.

அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நமது தாய்நாடான இந்தியாவிற்கு அமைதியையும், செழிப்பையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக! போதை மற்றும் அனாச்சாரங்களில் சிக்கியிருக்கும் நமது இளைஞர்களை அதிலிருந்து விடுவித்து, நேர்வழியில் நடத்துவானாக! வேற்றுமைகளை மறந்து இஸ்லாமியச் சமுதாயம் ஓரணியில் திரள நல்லருள் புரிவானாக! அவர்கள் தீட்டும் சதித் திட்டங்களை அல்லாஹ் முறியடித்து, தன் ஒளியைச் சம்பூர்ணமாக்குவானாக! ஆமீன்.


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.

தொகுப்பு: மெளலவி ஹாபிழ் 

M. முஹம்மது ரபீக் மிஸ்பாஹி , 

இமாம், மேலப்பள்ளிவாசல், இராஜபாளையம். 

Rajai Aalim Media

No comments:

Post a Comment

பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்!

  பயனற்ற உடற்பயிற்சியா? பாக்கியம் தரும் தொழுகையா? உள்ளச்சம் (குஷூஃ) நிறைந்த தொழுகையின் பேராற்றல்! ஆரம்ப குத்பா & அதிர வைக்கும் முன்னுரை ...